search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    பா.ம.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் இளைஞர்கள் சேருவதை தடுத்து நிறுத்துங்கள்- ராமதாஸ் உத்தரவு

    இனிமேல் யாரும் பா.ஜனதா பக்கம் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வும், அதேபோல் பா.ம.க.வும் களம் இறங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து அந்த பதவியை உதறிவிட்டு தமிழக பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்றவர் அண்ணாமலை. அவர் தலைவர் பதவிக்கு வந்த பிறகு தனது அதிரடி அரசியல் மூலம் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்து பா.ஜனதாதான் பெரிய கட்சி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

    அதற்கு ஏற்றார்போல் ஆளும் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். அவர் தலைமையில் நடக்கும் போராட்டங்களுக்கும் கூட்டம் அதிக அளவில் திரட்டப்படுகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க.வை கண்டித்து எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்பாராத வகையில் கூட்டம் திரண்டது.

    ஒரு பக்கம் போராட்டம், விமர்சனங்களை முன்னெடுக்கிறார். இன்னொரு புறத்தில் மற்ற கட்சிகளில் பதவிகள் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை கட்சிக்கு இழுக்கும் வேலைகளும் ஜரூராக நடக்கிறது.

    அதேபோல் மத்திய அரசு வழங்கும் வங்கி கடன், இலவச கியாஸ், வீடுகட்டி கொடுக்கும் திட்டம் போன்ற பல திட்டங்களை மாவட்ட வாரியாக கட்சியினர் மூலம் வீடுவீடாக தேடி சென்று கொடுக்கிறார்கள். அதோடு அந்த பயனாளிகளை தங்கள் ஆதரவாளர்களாக மாற்றி வருகிறார்கள்.

    அதேபோல் அண்ணாமலையின் அதிரடி பேச்சுக்களும், இளைஞர்கள் மத்தியில் எடுபடுகிறது. இதனால் மற்ற கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர்கள் பா.ஜனதா பக்கம் சாய்ந்து வருகிறார்கள். இதனால் அரசியல் களத்தில் எல்லா கட்சிகளுமே பா.ஜனதாவை உற்றுநோக்கி வருகின்றன.

    பாஜக

    தங்கள் கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு செல்பவர்களை தடுக்கவும், பா.ஜனதாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் எல்லா கட்சிகளும் வியூகம் அமைத்து வருகின்றன.

    அதற்கு முதல் அம்பை அ.தி.மு.க. எய்துள்ளது. அந்த கட்சியின் அமைப்பு செயலாளரான பொன்னையன் கூறும்போது, ‘சில நூறு பேரை திரட்டி போராட்டத்தை நடத்துவதால் பா.ஜனதா எதிர்க்கட்சியாக மாறவும் முடியாது. வளரவும் முடியாது. மாநில உரிமைகளை பறித்துவிட்டனர். கொள்கைகளை மாற்றாத வரையில் அந்த கட்சி தமிழகத்தில் வளர வாய்ப்பே இல்லை’ என்றார்.

    இதற்கும் அண்ணாமலை உடனடியாக பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘இது பொன்னையனின் தனிப்பட்ட கருத்து. தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதா வளர்ந்து வருகிறது. எங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது’ என்றார்.

    பா.ம.க. தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் 2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி என்ற இலக்கை நோக்கி செல்கிறது. இந்த சூழ்நிலையில் பா.ஜனதா வளர்ச்சியை கட்டுபடுத்தவும், தங்கள் கட்சியினர் அந்த பக்கம் செல்வதை தடுக்கவும் பா.ம.க. தீவிரம் காட்டி வருகிறது.

    பா.ம.க.வுக்கு செல்வாக்கு அதிகமுள்ள வட மாவட்டங்களில் அரசு உதவிகளை பெற்றுக்கொடுத்தும், பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தும் பா.ம.க.வில் உள்ள இளைஞர்களை பா.ஜனதாவினர் தங்கள் பக்கம் இழுத்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் பா.ம.க. தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஏற்கனவே ‘பிள்ளை பிடிக்கும் கும்பல்’ போல் சிலர் வருகிறார்கள். பாட்டாளி சொந்தங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ராமதாஸ் எச்சரித்து வந்தார். ஏற்கனவே பா.ம.க.வின் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வன்னியர் சங்க நிர்வாகிகள் சிலர் பா.ஜனதாவில் இணைந்து உள்ளனர்.

    இனிமேல் யாரும் பா.ஜனதா பக்கம் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

    கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசும்போது, ‘இட ஒதுக்கீடு பெற்று தந்தது, தமிழர்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருவது போன்ற பா.ம.க.வின் நிலைப்பாட்டை இளைஞர்கள் மத்தியில் எடுத்து சொல்லுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

    Next Story
    ×