search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்மநபர்கள் தப்பி வந்த கார்.
    X
    மர்மநபர்கள் தப்பி வந்த கார்.

    போலீஸ் என கூறி மளிகை கடையில் 5 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் கொள்ளையடித்த மர்மநபர்கள்

    கோவை அருகே போலீஸ் என கூறி மளிகை கடையில் 5 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் பாதையில் வெங்கடாசலம் நகரை சேர்ந்தவர் திலகம்(வயது60).

    இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மகன்கள் கவியரசன்(38), சிவா. இவர்களது சொந்த ஊர் நெல்லை.

    இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தனர். கடையின் அருகேயே வீடு எடுத்து தங்கி வசித்து வந்தனர்.

    நேற்று கடையில் சிவா மட்டுமே இருந்தார். அப்போது ஒரு வெள்ளை நிற கார் ஒன்று வந்து நின்றது. அதில் 4 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் காரில் அமர்ந்து கொள்ள மற்ற 3 பேரும் இறங்கி கடையை நோக்கி வந்தனர்.

    கடைக்கு வந்ததும்,சிவாவிடம், நாங்கள் போலீஸ் அதிகாரிகள், உங்கள் கடையில் குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சோதனை நடத்த இங்கு வந்துள்ளோம் என்றனர்.

    சிவாவும் அவர்களை போலீஸ் என நம்பி சோதனை நடத்த அனுமதித்தார். இதையடுத்து 3 பேரும் கடைக்குள் சென்று சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து, வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து, வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் இருந்த சிவா மற்றும் திலகத்திடம் செல்போனைப் பறித்து வைத்துக் கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வீட்டிலும் எதுவும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர்கள், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். போலீஸ் நிலையம் வாருங்கள் என்று காரில் அழைத்து சென்றனர். சிறிது தூரம் சென்றபின் சிவாவை காரில் இருந்து இறக்கி விட்டனர்.

    பின்னர் வீட்டிற்கு வந்த சிவாவுக்கு அவர்கள் போலீஸ் நிலையம் அழைத்து செல்லாமல் பாதி வழியில் இறக்கி விட்டதால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் சோதனை செய்தார்.

    அப்போது வீட்டில் பையில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை காணாமல் போய் இருந்தது. இதனால் போலீஸ் என கூறி சோதனை நடத்தியவர்கள் தான் திருடி சென்றிருப்பார்கள் என அவருக்கு தோன்றியது.

    உடனடியாக அவர் சூலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டு விசாரித்தனர். இதில் சிவாவின் வீட்டில் பணத்தை திருடி சென்றது, போலி போலீஸ் நபர்கள் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு இருந்த சி.சி.டி.வி பதிவுகளைச் சேகரித்து போலீஸ் வேடத்தில் கொள்ளையடித்த கும்பலைத் தேடி வருகின்றனர். இதே போல இந்த கும்பல் கடந்த 3 நாட்களாக இப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை என்ற பெயரில் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் என வசூல் செய்துள்ளனர். இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
    Next Story
    ×