என் மலர்
உள்ளூர் செய்திகள்

நூலகத்தை பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம் - பேராசிரியர் அறிவுரை
உடுமலை:
உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பருத்தி குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற சுந்தரராஜனுக்கு உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் இரண்டில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு உடுமலை கிளை நுாலகம் எண் 2 நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
நூலக வாசகர் வட்ட ஆலோசகர் ஐயப்பன், கனரா வங்கி பணி நிறைவு மேலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முனைவர் விஜயலட்சுமி வரவேற்று பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் அருணாசலம் முனைவர் பட்டம் பெற்ற சுந்தரராஜனுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். தொடர்ந்து நூலகத்தை பயன்படுத்தி முனைவர் பட்டம் பெற்ற சுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஏற்புரை ஆற்றிய முனைவர் பட்டம் பெற்ற சுந்தர்ராஜன் கூறும்பொழுது, நூலகத்தை பயன்படுத்தியதால் என்னால் இந்த அளவு உயர முடிந்தது. எனது ஆராய்ச்சிக்கு பல்வேறு வகையில் இந்த நூலகம் மற்றும் நூலகர்கள் உதவி செய்தனர். மாணவர்கள் நூலகத்தை அதிக அளவு பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் எனக் கூறினார்.






