search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    மதுரை ஜெயிலில் பிளேடு கொடுத்து கைதியை தற்கொலைக்கு தூண்டிய போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு

    உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடும்படி கைதியை தூண்டியதாகவும் போலீஸ் ஏட்டு சின்னசாமியை தற்காலிக பணி நீக்கம் செய்து மதுரை மத்திய ஜெயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது உசைன் (வயது 29). இவர் சமயநல்லூரில் நடந்த திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் முகமது உசேன் கடந்த 27-ந் தேதி காலை 10 மணிக்கு உடல் முழுவதும் பிளேடால் கீறி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மத்திய ஜெயிலில் கை விலங்கு பூட்டப்பட்டு இருந்த நிலையில், கைதிக்கு பிளேடு கிடைத்தது எப்படி? என்பது தொடர்பாக ஜெயில் நிர்வாகம் விசாரணை நடத்தியது. அப்போது செல்வகுமார் மற்றும் சின்னசாமி ஆகிய 2 பேர் அங்கு பாதுகாவல் பணியில் இருந்தது தெரியவந்தது. எனவே அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு ஜெயில் கைதி முகம்மது உசைனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது போலீஸ் ஏட்டு சின்னசாமியிடம் கைதி "எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்று தெரிவித்து உள்ளார். அப்போது அவரிடம் பிளேடு ஒன்றை கொடுத்த சின்னசாமி, "நான் பணியில் இருக்கும்போது தற்கொலை செய்ய முயற்சிக்க வேண்டாம். எனக்கு பதிலாக செல்வகுமார் என்பவர் பாதுகாவலுக்கு வருவார். அப்போது நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்" என்று கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் செல்வகுமார் பணிக்கு வந்து சேர்ந்தார். அப்போது முகமது உசேன் உடம்பை பிளேடால் அறுத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஜெயில் கைதியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகவும், உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடும்படி கைதியை தூண்டியதாகவும் போலீஸ் ஏட்டு சின்னசாமியை தற்காலிக பணி நீக்கம் செய்து மதுரை மத்திய ஜெயில் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

    Next Story
    ×