என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு கவர்னர் அனுமதி வழங்கக்கூடாது- வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு கவர்னர் அனுமதி வழங்கக்கூடாது என்று வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தை பாலைவனமாக்கும் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க. அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும். இதனை புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
4 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பதால், புதிய மதுபான தொழிற்சாலைகள் அனைத்தும் கிராமப்புற பகுதிகளில்தான் அமையும்.
இதனால் விவசாய நிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவர். அரசுக்கு வருவாய் கிடைக்கும், வேலைவாய்ப்பு பெருகும் என கூறுவதும் பொய்யான தகவல்தான்.
புதுவையில் ஏற்கனவே இயங்கும் 5 மதுபான தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் 70 சதவீத மதுபானங்கள் வெளிமாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் புதுவை அரசுக்கு, மதுபான தயாரிப்பு வரி மட்டுமே கிடைக்கிறது. கலால் வரி வேறு மாநிலங்களுக்கே செல்கிறது.
இதே விதிகள்தான் புதிய தொழிற் சாலைகளுக்கும் விதிக்கப்படும். எனவே வரி வருவாய் கிடைக்கும், வேலைவாய்ப்பு பெருகும் என்பதும் கண்துடைப்பு நாடகம்தான்.புதிதாக மதுபான ஆலைகள் திறக்கும் விஷயத்தில் மவுனம் காக்கும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்களை புதுவை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு கவர்னர் அனுமதி வழங்கக்கூடாது.
இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் பசுமை தீர்ப்பாயம், பிரதமரின் நீர்நிலைகளை பாதுகாக்கும் பிரிவு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் செய்ய உள்ளோம். இதனையும் மீறி மதுபான தொழிற்சாலைகளை கொண்டுவர முயற்சித்தால், புதுவை மாநில மக்கள் சார்பில், கட்சித்தலைமை அனுமதி பெற்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் குறியுள்ளார்.
Next Story






