search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்
    X
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்

    மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

    குடிநீர் குழாய்கள் பராமரித்தல் மற்றும் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
    மதுரை:

    மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் 17 லட்சத்து 66 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நகரின் சுகாதாரத்தை பேணும் வகையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 1500-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் பணியாற்றி வருகின்றனர்.

    மேலும் குடிநீர் குழாய்களை பராமரித்தல் உள்ளிட்ட பொறியியல் பிரிவில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக 3 கட்டங்களாக அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர்.

    அதன்படி இன்று காலை பணிக்கு செல்லாமல் மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள மேலவாசல் மாநகராட்சி தொழிலாளர் குடியிருப்பு வளாக பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். தினமும் ரூ.750 கூலி நிர்ணயம்செய்ய வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்ககைளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.

    இந்த போராட்டம் காரணமாக இன்று மாநகர பகுதிகளில் துப்புரவு பணிகள் நடைபெறவில்லை. இதனால் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் குடிநீர் குழாய்கள் பராமரித்தல் மற்றும் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×