search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    பண்ருட்டி அருகே வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை பறித்த கொள்ளையர்கள்

    பண்ருட்டி அருகே வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையில் வசிப்பவர் சுகுமார். பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது தாயார் சாந்தாம்மாள் (வயது 65).

    இவர் பனப்பாக்கம் பகுதியில் தனியாக குடியிருந்து வருகிறார். தனது தாயை பார்ப்பதற்காக சுகுமார் அடிக்கடி இங்கு வந்து செல்வதுண்டு.

    நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். ஆட்கள் வரும் சத்தத்தை அறிந்த சாந்தாம்மாள் நீங்கள் யார்? என்ன வேண்டும்? என்று கேட்டார்.

    உடனே அந்த மர்ம நபர்கள் சாந்தாம்மாளின் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி தருமாறு கேட்டனர். ஆனால், சாந்தாம்மாள் மறுத்தார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். அதன் பின்னர் கொள்ளையர் அவரிடம் இருந்து 8 பவுன் நகையை பறித்தனர்.

    பின்னர் அதே பகுதியில் உள்ள சுகுமார் என்பவரின் வீட்டுக்குள் சென்றனர். இவர் சென்னையில் உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கொள்ளையர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு எதுவும் இல்லாததால் பொருட்களை சூறையாடி விட்டு அருகில் உள்ள ராமலிங்கம் வீட்டின் பூட்டை உடைத்தனர். ஆனால், அங்கும் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இன்னொரு வீட்டையும் உடைத்தனர். அங்கும் எதுவும் சிக்காததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

    கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சாந்தாம் மாளின் மகன் சுகுமார் இன்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது தனது தாய் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவரை சுகுமார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பனப்பாக்கம் பகுதியில் 4 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    இது குறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர்.

    துணை போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லாவும் பனப்பாக்கத்துக்கு விரைந்தார். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கொள்களையர்கள் பற்றி துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்ப நாய் வரழைக்கப்பட்டது. அது சாந்தாம்மாள் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்தனர். அவர்கள் கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்து துப்பு துலக்கி வருகிறார்கள்.

    Next Story
    ×