search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசிய ஏ.எஸ்.பி லாவண்யா.
    X
    பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசிய ஏ.எஸ்.பி லாவண்யா.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 200 இடைநின்ற மாணவிகளை பள்ளியில் சேர்த்த காவல் அதிகாரி

    திண்டுக்கல் மாவட்டத்தில் 200 இடைநின்ற மாணவிகளை பள்ளியில் சேர்த்த காவல் அதிகாரி லாவண்யாவுக்கு பாராட்டு
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவு நூற்பாலைகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் இளம்வயது தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கிய கொரோனா ஊரடங்கின்போது தொழில்கள் அனைத்தும் முடங்கின.

    அதன்பிறகு படிப்படியாக நிலைமை சீரடைந்து வந்த போதிலும் பல குடும்பங்கள் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்புகளை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர். இதனால் தங்களது இளம்வயது மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடந்தன. வறுமை மற்றும் பள்ளிக்கு அனுப்பி வைக்க இயலாத சூழ்நிலையால் இதுபோன்ற நிலைக்கு மாணவிகள் தள்ளப்பட்டனர்.

    நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் பெரும்பாலான மாணவிகள் பள்ளிக்கு வராத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளிகள்தாறும் ஆய்வு செய்தபோது கல்வியை இடைநிறுத்தி அவர்கள் மில்கள் மற்றும நூற்பாலைகளில் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது. மீண்டும் பள்ளிக்கு செல்வோம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து திண்டுக்கல் ஏ.எஸ்.பி லாவண்யா முயற்சியின் பேரில் இடைநின்ற மாணவிகள் கணக்கெடுக்கப்பட்டனர். பல்வேறு காரணங்களால் இடைநின்ற 200 மாணவிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

    மேலும் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகின்றனரா என்பதும் கண்காணிக்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து மாணவிகள் கல்வி கற்பதை உறுதி செய்து வரும் ஏ.எஸ்.பி லாவண்யாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு மாணவிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து
    அறிந்து கொள்வதுடன் அதற்கான தீர்வுகளையும் தெரிவித்து வருகிறார்.
    இதுமட்டுமின்றி பாலியல் தொந்தரவுகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும், குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து தொடர்பு கொள்ளவேண்டிய அதிகாரிகள், செல்போன் எண்கள் குறித்தும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×