என் மலர்
உள்ளூர் செய்திகள்

எம்.பி.திருநாவுக்கரசர்
மோடி நினைத்தால்தான் சசிகலா அ.தி.மு.க.வுக்கு வரமுடியும் - எம்.பி.திருநாவுக்கரசர் பேட்டி
மோடி நினைத்தால்தான் சசிகலா அ.தி.மு.க.வுக்கு வரமுடியும் என்று எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறும்போது, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் போதிய அளவு கிடைக்கவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. மின்சாரம் பற்றாக்குறை இல்லை என்று அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்சார தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.
தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கட்சியிலிருந்து வெளியேறி சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். அது அவருடைய தனிப்பட்ட முடிவு. அவர் பிரிந்து சென்றதால் காங்கிரஸ் கீழ்ந்துவிடாது. காங்கிரஸ் கட்சி ஒரு பேரியக்கம் அதை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.
பிரதமருக்கு எந்த ஒரு மாநிலத்துக்கும், நாட்டுக்கும் செல்வதற்கு முழு அதிகாரம் உண்டு. அதன்படி தமிழகத்திற்கு வந்தார். பேரறிவாளன் விவகாரத்தில் தி.மு.க., காங்கிரஸ் கொள்கைகள் வேறு, வேறு, அது தெரிந்துதான் கூட்டணியில் உள்ளோம்.
கூட்டணியில் எந்த பிரிவும் இல்லை. பிரசாந்த் கிஷோர் காங்கிரசுக்கு வராமல் இருந்ததுதான் கட்சிக்கு லாபம். அவருடைய கணக்கு ஒருசில தேர்தல்களில் தோல்வி கண்டுள்ளது. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எத்தனை முறைதான் சோதனை நடத்துவார்கள்.
சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவ்வளவு என்று ஆதாரங்களை இதுவரை அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இத்தகைய சோதனை என்பது கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிதான். அவர்கள் சட்டரீதியாக எதிர்கொண்டு அதில் இருந்து மீண்டுவார்கள்.
சசிகலா மட்டுமே அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவேன் என்று கூறி வருகிறார். ஆனால் ஒபிஎஸ், இபிஎஸ் இருவரும் கட்சிக்குள் அவரை சேர்ப்பதாக தெரியவில்லை. ஒருவேளை மோடி மற்றும் அமித்ஷா நினைத்தால் சசிகலா அ.தி.மு.க.வுக்கு வரலாம். ஏனென்றால் இரட்டை தலைமையை முடிவு செய்தது மோடியும், அமித்ஷாவும்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story






