search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் நிலையம்
    X
    ரெயில் நிலையம்

    ரூ. 440 கோடியில் மதுரை ரெயில் நிலையம் சீரமைப்பு

    ரூ. 440 கோடியில் 4 மாடிகளுடன் மதுரை ரெயில் நிலையம் சீரமைக்கப்படுகிறது.
    மதுரை

    தென்தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையமாக விளங்கும் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வட இந்தியாவில் இருந்து வரும் யாத்ரீகர்கள், பயணிகள் மதுரை ரெயில் நிலையம் வழியாக ராமேசுவரம், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றனர்.

    மேலும் தென் மாவட்டங்களுக்கும் இங்கிருந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மதுரை ரெயில் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் சரக்குகளை கையாள்வதிலும் மதுரை ரெயில் நிலையம் கணிசமான வருவாயை ஈட்டி வருகிறது.

    இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மத்திய ரெயில்வே அமைச்சகம் தமிழகத்தில் மதுரை, ராமேசுவரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அதன்படி மதுரை ரெயில் நிலையத்தை நவீன முறையில் மறுஉருவாக்கம் செய்ய ரூ.440 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை ெரெயில் நிலையம் 440 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்பட உள்ளது. இங்கு பயணிகள் நெரிசல் இன்றி எளிதாக சென்று வரும் வகையில் மறு சீரமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக பார்சல் சேவை, பயணிகள் வருகை, புறப்பாடு ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட உள்ளன. 

    ரெயில் நிலைய கிழக்கு- மேற்கு நுழைவாயில்களை இணைக்கும் வகையில் பயணிகள் காத்திருப்பு அரங்கு கட்டப்பட உள்ளது. ரெயில் இருப்புப் பாதைக்கு மேல் அமையும் இந்த அரங்கில்  ஓய்வு அறை, கழிப்பறை, உணவகங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

    காத்திருப்பு அரங்கில் இருந்து  நடை மேடைக்கு செல்ல வசதியாக மின் தூக்கி, எஸ்கலேட்டர் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. மதுரை கிழக்கு நுழைவாயிலில் 22,500 சதுர மீட்டரில் 4 மாடிகள் உடைய புதிய கட்டிடம் அமைய உள்ளது. தரைதளத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் அலுவலகங்கள் இருக்கும். மாடிகளில் ரெயில்வே சேவை அலுவலகங்கள் இடம்பெறும்.
    முதல் தளத்தில் பயணிகள் காத்திருப்பு அரங்கு அமைகிறது. சுற்றுப்புற வளாகத்தில் 250 கார்கள் நிறுத்தும் வகையில் கிழக்கு- மேற்கு நுழைவாயிலில் பல்லடுக்கு வாகன காப்பகம் அமைய உள்ளது. அதேபோல 2000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பல்லடுக்கு வாகன காப்பகமும் அமைக்கப்பட உள்ளது. பார்சல் சேவைக்காக தனி நடை மேம்பாலம் அமையும். மேலும் ரெயில் நிலையத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைய உள்ளது. 

    இருசக்கர வாகனம், ஆட்டோ ரிக்ஷா, கார் ஆகியவை சென்று வர தனித்தனி பாதைகள் அமைக்கப்பட உள்ளது. 6 நடை மேடைகளும் புதிய மேற்கூரை வசதியுடன் புணரமைக்கப்பட உள்ளது. அதுவும் தவிர தற்போது உள்ள 2 நடை மேம்பாலங்களும் மேம்படுத்தப்படும்.  மேற்கு நுழைவாயிலில் உள்ள ரெயில் நிலைய கட்டிடம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான உத்தேச செலவு ரூபாய் 440 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

    ரூ 440 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள மதுரை ெரயில் நிலையம் மறு உருவாக்க திட்டத்தை சென்னையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கி விரைவில் முடிக்கப்படும் என மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல் ரூ. 506 கோடி மதிப்பில் மதுரை-தேனி வரை 75 கி.மீ. புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டு இன்று மாலை முதல் ரெயில் சேவை தொடங்குகிறது. இதனையும் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
    Next Story
    ×