search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வில் பரபரப்பான 3 மணி நேரம்- நீண்ட விவாதத்துக்கு பிறகு சமரசம்

    அ.தி.மு.க. சார்பில் 2 வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த ஒரு மாதமாக தீவிர ஆலோசனை நடந்தது. மேல்சபை எம்.பி. பதவி கேட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் 302 பேர் கடிதம் கொடுத்து உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில்இருந்து 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. 31-ந் தேதி வரை மனுதாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.

    தமிழக சட்டசபையில்உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் 4 எம்.பி.க்களை தி.மு.க. கூட்டணி சார்பிலும், 2 எம்.பி.க்களை அ.தி.மு.க. சார்பிலும் தேர்ந்தெடுக்க முடியும். தி.மு.க. சார்பில் கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஒரு இடத்தை தோழமை கட்சியான காங்கிரசுக்கு தி.மு.க. விட்டுக்கொடுத்துள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் 2 வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த ஒரு மாதமாக தீவிர ஆலோசனை நடந்தது. மேல்சபை எம்.பி. பதவி கேட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் 302 பேர் கடிதம் கொடுத்து உள்ளனர்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களும், மேல்சபை எம்.பி.க்கு குறி வைத்து ஆதரவு திரட்டினார்கள். இதனால் 2 வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அ.தி.மு.க.வில் கடும் இழுபறி ஏற்பட்டது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஒருவரும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒருவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    எடப்பாடி பழனிசாமி பரிந்துரைத்த பெயர்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஏற்கவில்லை. தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு எம்.பி. பதவி கொடுக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் பிடிவாதமாகவும், உறுதியாகவும் இருந்தார். இதனால் எடப்பாடி பழனிசாமியும் தனது தேர்வில் மாற்றம் செய்ய நேரிட்டது.

    முதலில் அவர் முன்னாள் அமைச்சர் செம்மலையை தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. பின்னர் சி.வி.சண்முகத்தை தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. சி.வி. சண்முகத்தை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தென் மாவட்டத்தில் இருந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தான் கடந்த சில தினங்களாக ஆய்வில் ஈடுபட்டனர்.

    தென் மாவட்டத்தில் இருந்து தேர்வாக பல மூத்த தலைவர்களிடம் கடும் போட்டி நிலவியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ் சத்யனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அவரை ஏற்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் பெயர் முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக ஏற்க மறுத்து விட்டார்.

    இதையடுத்து தென் மாவட்டத்தில் இருந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆலோசிக்க நேற்று ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் சென்றனர். அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடத்தினார்கள்.

    சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை நீடித்தது. நீண்ட இந்த ஆலோசனைக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மரை எம்.பி.யாக தேர்வு செய்ய ஒருமித்த கருத்து ஏற்பட்டது. அதன்பிறகுதான் அ.தி.மு.க. வேட்பாளர்களாக சி.வி.சண்முகமும், தர்மரும் தேர்வு செய்யப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் நேற்று இரவு வெளியானது.

    Next Story
    ×