search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கப்பல் துறை என்ஜினீயர் பலி

    துறையூர் அருகே நீர்வீழ்ச்சியில் குளித்தபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி என்ஜினீயர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    துறையூர்:

    பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தை சேர்ந்தவர் ஹசன்கான் மகன் ஷாஜகான் (வயது 21). அதே ஊரை சேர்ந்தவர் நசீர் மகன் ஷாஜித்கான் (21).

    இவர்கள் இருவரும் தங்களது நண்பரான மண்ணச்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த கப்பல் துறையில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்த முகுந்தன் (37) என்பவருடன் துறையூர் அருகே உள்ள வண்ணாடு ஊராட்சிக்குட்பட்ட கோரையாறு பகுதிக்கு நேற்று மாலை சென்று அங்குள்ள அருவியில் குளித்துள்ளனர்.

    அப்பொழுது அந்தப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால், கோரையாற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஆற்றை விட்டு வெளியேற முடியாத மூன்று பேரும் வெள்ளப்பெருக்கில் சிக்கினர். பாறைகளை பிடித்து வெளியே வர முயன்றும் முடியவில்லை.

    கரை புரண்ட வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக ஷாஜகான் மற்றும் ஷாஜித்கான் இருவரும் வெள்ளப்போக்கின் வழியிலேயே தடுப்புகளை பிடித்துக்கொண்டு கரை சேர்ந்தனர். ஆனால் முகுந்தன் வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனையடுத்து முகுந்தனின் நண்பர்கள் இருவரும், அப்பகுதி பொதுமக்களும் துறையூர் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார், தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை ஆகியோரின் கூட்டு முயற்சியால் முகுந்தனின் உடலை நள்ளிரவு 12 மணிக்கு மீட்டனர்.

    பாறை இடுக்கில் சிக்கியிருந்த முகுந்தனின் உடல் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த என்ஜினீயர் முகுந்தனுக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×