search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
    X
    அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

    கொடைக்கானலில் 59-வது கோடைவிழா, மலர்கண்காட்சி- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

    கொடைக்கானலில் கடந்த 2 ஆண்டுகளாக விழா நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு கோடைவிழா நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதனைதொடர்ந்து இன்று கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது.
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளுகுளு சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக விழா நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு கோடைவிழா நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதனைதொடர்ந்து இன்று கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது.

    விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். கோடைவிழாவை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர், புவிசார்குறியீடு பெற்ற வெள்ளைப்பூண்டு ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    கோடைவிழாவை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோடைவிழாவை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு விளையாட்டு போட்டிகள் இன்றுமுதல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பிரையண்ட் பூங்காவில் இன்று இசைநாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டது. நாளை காலையில் கயிறு இழுத்தல் போட்டியும், மாலையில் பானை உடைக்கும் போட்டியும் நடக்கிறது. 26-ம் தேதி காலை 10 மணிக்கு மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி, மதியம் 2 மணிக்கு சாக்கு ஓட்டம் ஆகியவையும், 27-ந்தேதி மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் இருபாலருக்குமான வாலிபால் போட்டி, 28-ந்தேதி காலை 8 மணிக்கு ஹாக்கி போட்டி, 29-ந் தேதி கபடிபோட்டி, 30 மற்றும் 31-ந்தேதி கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

    ஜூன் 1-ந்தேதி பிரையண்ட் பூங்காவில் இருபாலருக்குமான மினி மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதுதவிர படகு அலங்கார போட்டி, வாத்து பிடிக்கும் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற உள்ளது. 
    Next Story
    ×