என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை விறுவிறுப்பு
ஈரோட்டில் முகூர்த்த நாள் என்பதால் ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை விறுவிறுப்பு, இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் முகூர்த்த நாள் என்பதால் ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை விறுவிறுப்பு, இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
சாதாரண நாட்களில் ஒரு கோடி வரை வர்த்தகம் நடைபெறும். பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று வரும். மற்ற இடங்களை விட இங்கு ஜவுளி ரகங்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் இங்கு வியாபாரிகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக வியாபாரம் களை கட்டியதும் தற்போது நூல் விலை உயர்வு பெரும் அடியாக இருந்து வருகிறது. இதனால் ஜவுளி வியாபாரம் சுமாராகவே நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் அதே சமயம் வெளிமாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்த தால் மொத்த வியா பாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறும்போது, முகூர்த்த நாள் என்பதால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. 40 சதவிகிதத்திற்கு ஜவுளிகள் விற்பனையானது. ஆனால் அதேநேரம் ஆந்திராவில் இருந்து மட்டும் வியாபாரிகள் வந்திருப்பதால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த வியாபாரம் வெறும் 15 சதவீதம் மட்டுமே நடந்தது. இதற்கு முக்கியக் காரணம் நூல் விலை உயர்வு ஆகும்.
ஏற்கனவே இந்நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி தொழில் நலிவடைந்து வருகிறது. இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலும் நூல் விலை மேலும் கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. தற்போது பஞ்சுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
எனவே பஞ்சுக்கான ஆன்லைன் வர்த்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். பஞ்சுக்கான இறக்குமதியை ஊக்குவித்து அதிக அளவில் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்றனர்.
Next Story