search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.
    X
    மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆரல்வாய்மொழியில் பேரூராட்சி அலுவலக காவலாளி வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை

    ஆரல்வாய்மொழியில் பேரூராட்சி அலுவலக காவலாளி வீட்டில் இருந்து 20 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர் மனோகரன்.

    இவர் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்றத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு மனோகரன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பணிக்கு வந்து விட்டார்.

    அவரது பெற்றோர், மனைவி, குழந்தைகள், அவருடைய தங்கை மற்றும் அவரது இரு குழந்தைகள் வீட்டில் இருந்தனர். அவர்கள் இரவில் உணவு அருந்திய பிறகு தனித்தனி அறைகளில் படுத்து விட்டனர்.

    இந்தநிலையில் இரவு யாரோ மர்மநபர் வீட்டின் கதவை கம்பியால் உடைத்து உள்ளே புகுந்து உள்ளான். அவன் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டான்.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

    பீரோ அருகிலேயே சாவியை வைத்து இருந்ததால் மர்மநபர் அதனை எடுத்து பீரோவை திறந்து கொள்ளையடித்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர் தான் கொண்டு வந்த கைப்பையை தவறவிட்டு சென்றுள்ளான். அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து கொள்ளை நடந்த வீட்டுக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டைச் சுற்றியுள்ள தெருவை சுற்றி வந்த மோப்பநாய் சிறிது தூரம் சென்று நின்று விட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியிருப்பது அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த சில நாட்களாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதாக புகார்கள் உள்ளன.

    இந்த நிலையில் வீட்டில் ஆட்கள் இருப்பது தெரிந்தும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியிருப்பதால் சுற்று வட்டார பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×