search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேம்பால பணியை தணிக்கை குழுவினர் ஆய்வு
    X
    மேம்பால பணியை தணிக்கை குழுவினர் ஆய்வு

    புட்லூர், பட்டாபிராமில் ரெயில்வே மேம்பால பணிகளில் தணிக்கை குழுவினர் ஆய்வு

    நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ள பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. மின்கம்பங்களால் தாமதமான பணிகள் தற்போது மின்கம்பங்கள் அகற்றப்பட்டு மேம்பால பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.

    திருவள்ளூர்:

    நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகள் மற்றும் பாலப்பணிகள் முறையாகவும், தரமாகவும் நடைபெறுகிறதா என உறுதி செய்ய உள்தணிக்கை என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டுமான மற்றும் பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலையில் மாநில அரசு நிதியில் செயல்படும் பணிகள் மற்றும் சென்னை பெருநகர திட்ட அலகுகளில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

    இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மற்றும் காக்களூர் புட்லுாரை இணைக்கும் வகையில், 18 கோடி ரூபாயில் 620 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம் உடைய மேம்பாலம் கட்டும் பணி, நடந்து வருகிறது. இதில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் பணி நிறைவடைந்து விட்டது.

    இதேபோல், நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ள பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. மின்கம்பங்களால் தாமதமான பணிகள் தற்போது மின்கம்பங்கள் அகற்றப்பட்டு மேம்பால பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.

    இந்த மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த சென்னை வட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ப.செந்தில் தலைமையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் ம.சத்தியசீலன் மற்றும் நான்கு உதவி கோட்டப்பொறியாளர்கள், 8 உதவிப்பொறியாளர்கள் அடங்கிய உள் தணிக்கை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இதேபோல் பட்டாபிராம் பகுதியில் ரெயில்வே கேட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளையும் ஆய்வு செய்தனர். மேலும், திருவலங்காடு பகுதியில் நடந்து வரும் சாலை மேம்பால பணிகள் உட்பட தமிழகத்தில் நடந்து வரும் சாலைபணிகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று உள் தணிக்கை குழுவினர் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு கிராம சாலைகள் கோட்டப் பொறியாளர் ராமச்சந்திரன், உதவி கோட்டப் பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் டில்லிபாபு உடன் இருந்தனர்.

    Next Story
    ×