என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
ஈரோடு மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஈரோடு மீரா மொய்தீன் வீதியை சேர்ந்த சாந்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்து மனு கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் பெயர் செந்தில்குமார். எனது கணவர் ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரது மேல் உள்ள உயர் அதிகாரி ஒருவர் எனது கணவரிடம் அரசு வேலை வாங்கித் தருகிறேன் உனக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்து வா என்று கூறினார்.
இதனை நம்பி எனது கணவர் சிலர் அழைத்து வந்து அவர்களிடம் பணம் வாங்கி கொடுத்தார். இவ்வாறாக ரூ.10 லட்சம் வரை அந்த மாநகராட்சி அதிகாரியிடம் கொடுத்தார். ஆனால் அந்த அதிகாரி சொல்லியபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணமும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் எனது கணவர் உட்பட 7 பேர் தற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்தனர். இதனால் எனது கணவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் அந்த அதிகாரியிடம் எனது கணவர் பணத்தை திருப்பி கேட்ட போது அவர் திருப்பி தரவில்லை. நானும் எனது மகனும் அந்த அதிகாரியிடம் பணத்தை கேட்டபோது அவர் எங்களை தரக்குறைவாக பேசினார்.
இந்நிலையில் பணத்தை இழந்தவர்கள் எனது கணவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். இதனால் தற்கொலை செய்து கொள்வதாக எனது கணவர் போனில் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி ஈரோடு பஸ் நிலையத்தில் வைத்து தனது கணவர் விஷம் குடித்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனிலும் மறுநாள் சிகிச்சை பலனின்றி எனது கணவர் இறந்தார்.
தற்போது நான் எனது குழந்தைகளுடன் வாழ வழி தெரியாமல் நிற்கிறேன். எனவே எனது கணவருக்கு வரவேண்டிய பணத்தை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என் வறுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு வேலை வாங்கித் தரவேண்டும். இதற்கு காரணமான அந்த மாநகராட்சி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Next Story






