என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் 2-வது நாளாக கொட்டும் மழையிலும் ரோஜா கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் 2-வது நாளாக கொட்டும் மழையிலும் ரோஜா கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களால் செய்யப்பட்டுள்ள பனிக்கரடி, மான், பொம்மைகள் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து, அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தொடங்கி நடந்து வருகிறது. காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சியை தொடர்ந்து நேற்று, ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடந்தது.
பூங்கா நுழைவு வாயிலில் ரோஜா மலர்களை கொண்டு தோரணம் கட்டப்ப–ட்டிருந்தது. மேலும் பூங்கா முழுவதும் பல வகையான மலர் அலங்காரங்கள், ரோஜா இதழ்களை கொண்டு பல்வேறு அரங்கங்களும், ரங்கோலிகளும் பூங்காவில் போடப்பட்டிருந்தது.
ரோஜா கண்காட்சியை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.
ரோஜா பூங்காவில் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு,பனிக்கரடி, படச்சுருள், பியோனா, மான், குழந்தைகளுக்கு பிடித்தமான மோட்டு, பட்லு கார்ட்டூன் பொம்மைகளும் ரோஜாக்களால் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
குழந்தைகள் விளையாடி மகிழும் சறுக்கு, திண்டுக்கல் பூட்டு சாவி, மனித உருவம் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தது.
31 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு செய்யப்பட்ட மர வீடு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதுதவிர பிளாஸ்டிக் மாற்றாக மஞ்சள் பையை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக பூங்காவில் ஆங்காங்கே பூக்களை கொண்டு தயாரான மஞ்சள் பை அலங்காரமும் காணப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இன்று காலையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஊட்டியில் காலை முதலே மழை பெய்து கொண்டே இருந்தது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் குடை பிடித்த படியும், சிலர் மழையில் நனைந்தபடியும் ரோஜா மலர்களால் செய்யப்பட்டுள்ள பனிக்கரடி, மான், பொம்மைகள் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து மகிழ்ந்ததுடன், அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
பூங்காவில் உள்ள நிலா மாடம் அருகே மெரிகோல்டு மலா்களை கொண்டு பட்டாம்பூச்சி வடிவில் அமைக்கப்பட்டுள்ள ’செல்பி ஸ்பாட்’ முன்பு புகைப்படம் எடுத்தனர்.
மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கண்ணை கவரும் வகையில் மஞ்சள், சிவப்பு என பல வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கியது. இதனையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story






