என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
மின் வேலியில் சிக்கி குரங்கு பலி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மின் வேலியில் சிக்கிய குரங்கு பரிதாபமாக பலியானது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சிக்குட்பட்ட கதுவாரிப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பல ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் மின் வேல அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஏராளமான குரங்குகள் அப்பகுதியில் வசித்து வந்தன. இரை தேடியும், தண்ணீர் குடிக்கவும் அங்கு குரங்குகள் முகாமிடுவது வழக்கமான ஒன்று. அதேபோல் அருகிலுள்ள திருவரங்குளம் வனப்பகுதியில் மயில், மான் உள்ளிட்டவையும் அதிக அளவில் வசித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று குரங்கு தண்ணீர் குடிப்பதற்கு வேலியைத் தாண்டும்போது மின்வேலியில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு சாலையில் இறந்து கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரையிலும் குரங்கை எடுப்பதற்கு வனத்துறையினர் யாரும் முன்வரவில்லை என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த மின் வேலியால் அப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடுகளும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விவசாய நிலங்கள் சார்ந்துள்ள அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலி தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அதனை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






