என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
சாலையோர மரக்கன்றுகளை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
சாலையோர மரக்கன்றுகளை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ .14 லட்சம் செலவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் செங்குணம் பெருமாள் மலைப்பகுதியில் ஏராளமான மரங்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இந்த மரக்கன்றுகளை கால்நடைகளிடம் இருந்து காப்பாற்ற இரும்பு கூண்டு அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் வரை இந்த மரக்கன்றுகள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் 25 சதவீத மரக்கன்றுகள் பட்டுப் போய் விட்டன.
இதுபற்றி அப்பகுதி கிராம மக்கள் கூறும்போது, கடந்த மாதம் வரை நடவு செய்த மரக்கன்றுகளை பராமரித்து வந்தனர். கோடைகாலத்தில் தண்ணீர் விடாத காரணத்தினால் மரக்கன்றுகள் காய்ந்து போய் விட்டன.
மரக்கன்று நடுவதோடு தங்கள் பணி முடிந்துவிட்டதாக பஞ்சாயத்து நிர்வாகம் நினைக்கிறது. இதனால் அரசின் நிதி தான் வீணாகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் நடவு செய்யும் மரக்கன்றுகளை பராமரித்து வளர்த்தெடுக்க நிதி ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே திட்டத்தின் நோக்கம் நிறைவேறும். மரம் நடுவதை விட அதனை பராமரித்து வளர்ப்பதே முக்கியம் என்றனர்.
பஞ்சாயத்து நிர்வாக தரப்பில் கூறும்போது, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்ற புதியவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மரக்கன்றுகளை பராமரிக்க பணியமர்த்தப்பட உள்ளனர். நடவு செய்த மரங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்
Next Story






