என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடும்பாறையில் அகழாய்வில் கிடைத்த இரும்பு உருக்காலை பாகங்களை படத்தில் காணலாம்.
    X
    மயிலாடும்பாறையில் அகழாய்வில் கிடைத்த இரும்பு உருக்காலை பாகங்களை படத்தில் காணலாம்.

    மயிலாடும்பாறை 2-ம் கட்ட அகழாய்வில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைக்க வாய்ப்பு- இயக்குனர் தகவல்

    மயிலாடும்பாறையில் ஆய்வை தொடர்ந்து கொண்டு சென்றால், பழங்கற்காலம் முதல், தற்போதுவரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என அகழாய்வு இயக்குனர் தெரிவித்தார்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம், தொகரப்பள்ளி, மயிலாடும்பாறையில் கடந்த ஆண்டு தமிழகத் தொல்லியல் துறையினர் முதற்கட்ட அகழாய்வைத் தொடங்கினார்கள். அதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு வாள், சிவப்புநிற மூன்று கால் ஜாடி போன்ற முக்கிய பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த ஆண்டில் 2-ம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது:-

    மயிலாடும்பாறை சானரப்பன் மலைப் பகுதியில் உள்ள வாழ்விடப் பகுதியில் கிடைத்த கரிமப் பொருள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

    அதன்படி, 4,200 ஆண்டுகள் முதல் 700 ஆண்டுகள் வரை கல்வெட்டுகள் கிடைப்பதால், தொடர்ந்து இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளன. அதற்கான வாழ்விடப் பகுதிகளும், ஈமச்சின்ன பகுதிகளும் கிடைத்துள்ளன. இங்கு இரும்பு தயாரித்ததற்கான உலைகள் இருந்துள்ளன. அதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக 2-ம் கட்ட அகழாய்வில் ஆய்வு செய்ய உள்ளோம். தமிழகத்தில் இதுவரை இது போன்ற அகழாய்வு மேற்கொள்ளாததால், அதன் முடிவுகள் எங்கும் இல்லை. முதல் முறையாக தமிழகத்தில் இங்குதான் இரும்பு பயன்பாட்டிற்கு அதிக கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆய்வை தொடர்ந்து கொண்டு சென்றால், பழங்கற்காலம் முதல், தற்போது வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 

    இங்கு பழங்கால செங்கல்லும் கிடைத்துள்ளதால், தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் பட்சத்தில் கட்டிடங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் உடனிருந்தனர். 
    Next Story
    ×