search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாநகராட்சியில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 24 மணி நேர குடிநீர் வினியோக திட்டத்தினை அமைச்சர்கள் கே.என். நேரு
    X
    கோவை மாநகராட்சியில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 24 மணி நேர குடிநீர் வினியோக திட்டத்தினை அமைச்சர்கள் கே.என். நேரு

    முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்- ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

    குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க மும்பையில் இருந்து சிறப்பு ஆலை கொண்டுவரப்பட்டு பணிகள் செய்யப்படும்.
    கோவை:

    கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 5.59 கோடி மதிப்பீட்டில் 9 முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் ரூ. 49.62 கோடி மதிப்பீட்டில் 263 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

    இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார். மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா முன்னிலை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா வரவேற்புரை ஆற்றினார். 

    முன்னதாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வாலாங்குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை  அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி வரைபடத்தை பார்வை–யிட்ட அமைச்சர் கே.என்.நேரு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடத்தில் அறிவுறுத்தினார். 

    ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா விளக்கி கூறினார். மேலும், இந்த ஆய்வின்போது நீர்வழிப் பாதைகளை பார்வையிட்டனர்.  இதைத்தொடர்ந்து ஆடிஸ் வீதியில் ரூ2.50 கோடி மதிப்பீட்டில்  நூலக அறிவுசார் மைய கட்டிட பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். 

    தொடர்ந்து வடவள்ளி ரேவதி நகரில் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பின்னர் மாநகராட்சி வளாகத்தில் புகைப்பட கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டு அரசின் ஓராண்டு கால சாதனை மலர் வெளியிடப்பட்டது.கோவை மாநகராட்சி நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என் நேரு கூறியதாவது:-


    தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை, குடிநீர் வசதி, குப்பை கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் ரூ. 750 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது. 

    அந்த பணி இன்னும் ஓராண்டில் நிறைவு பெற்றுவிடும். சிறுவாணியில் இருந்து 9 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் கோவை மாநகராட்சிக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் 2½ கோடி லிட்டர் மட்டுமே கொடுக்கிறார்கள்.

     இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்கனவே தமிழக முதல்- அமைச்சர், கேரளா முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். விரைவில் தமிழக உயர் அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்து குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். கோவை மாநகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை தனியார் நிறுவனத்தினர் வாங்காத நிலையில் எல்லா குப்பைகளும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு சென்றடைந்தது. 

    அதனை பயோ மைனிங் முறையில் குப்பைகள் அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 16 ஏக்கரில் குப்பைகள் அழிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பைக்கி–டங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    மேலும் கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க மும்பையில் இருந்து சிறப்பு ஆலை கொண்டுவரப்பட்டு பணிகள் செய்யப்படும். ரூ.591.44 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.20.50 கோடியில் நமக்கு நமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சியில்  செய்யாத பணிகளை செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டு கணக்கு காட்டிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிகளில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், எம்.பி சண்முகசுந்தரம், துணை–மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர் சர்மிளா, தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×