search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய்
    X
    தேங்காய்

    பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து வீழ்ச்சியில் தேங்காய் விலை

    ஆதரவு விலை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பொள்ளாச்சி:

    கொப்பரைக்கு அரசு ரூ.105.90 ஆதார விலை வழங்கியும் தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியிலேயே இருந்துவருகிறது. இதை தடுக்க கொப்பரைக்கு பதிலாக தேங்காய்க்கு ஆதரவு விலை நிர்ணயிக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
     
     தமிழகத்தில் 4 லட்சம் ஹெக்டேரில் 12 கோடி தென்னை  மரங்கள் உள்ளன. அதில் குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் ஹெக்டேரில் 1.5 கோடி தென்னை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் இருந்தாலும், அதிக தேங்காய் உற்பத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களில்தான் உள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் முக்கிய தொழிலும் தென்னை விவசாயமாகவே உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களின் தேங்காய்களுக்கு  மகசூல் அடிப்படையில் அதிக வரவேற்பும் உள்ளது. 

    தென்னை மரங்கள் நீண்ட கால பயிராகும்.வெள்ளை ஈ தாக்குதல் ,காண்டாமிருக வண்டு தாக்குதல் என பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு இடையே இந்த தென்னை மரங்களில் விளையும் தேங்காய்க்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் மிகப்பெரிய குறையாக இருந்துவருகிறது. தேங்காய் விலை சரிவை தடுக்க தேங்காய் கொப்பரைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவு விலையாக ரூ.105.90 நிர்ணயம் செய்து கொள்முதல் செய்துவருகிறது. பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரி ஆகிய பகுதிகளில் கொள்முதல் மையங்கள் உள்ளன.

     ஆனால், வெளி மார்க்கெட்டில் குறைந்த பட்சமாக ரூ.70 முதலும், அதிக பட்சமாக ரூ. 87 வரையிலுமே தேங்காய் கொப்பரையின் தரத்தை பொறுத்து கொள்முதல் நடைபெறுகிறது. ஒரு தேங்காய் ஒன்று ரூ.9 முதல் 11 வரை மட்டுமே தேங்காயின் அளவை பொறுத்து விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஒன்றரை மாதங்களாக 1 கிலோ கொப்பரை ரூ.100க்கும் கீழ்தான் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

    அரசு விலை வீழ்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன்தான் அரசு கொள்முதல் மையங்களில் ரூ.105.90க்கு கொள்முதல் செய்கிறது. அப்படி இருந்தும் வெளிமார்க்கெட்டில் தற்போது ரூ.70 முதல் 87 வரை மட்டுமே கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. அப்படியானால், அரசு ரூ.105.90 விலை வழங்கியும் தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்கமுடியவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
     
    கொப்பரைக்கு கொள்முதல் விலை வழங்கி கொள்முதல் செய்வதைவிட,  தேங்காய்க்கு கட்டுபடியான ஆதரவு விலை நிர்ணயித்து கொள்முதல் செய்தால்தான் விவசாயிகளுக்கு நேரடியாக பயனுள்ளதாக இருக்கும். எப்படியென்றால், தேங்காயில் இருந்து கொப்பரையை உருவாக்க தேங்காய் மட்டைகளில் இருந்து தேங்காயை பிரித்து, தேங்காயை உடைத்து அதை உலர வைத்து கொப்பரைகளாக மாற்றவேண்டும். இதற்கு விவசாயிகளுக்கு உலர் கலன்கள் அவசியமானதாகும்.

     ஒவ்வொரு விவசாயியும் உலர்கலன்கள் அமைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். தென்னை விவசாயிகளில் 98 சதவீதம் பேருக்கு உலர்கலன் இல்லை என்பது குறிப்பிடத்தக்காகும்.  இதனால், விவசாயிகள் தேங்காய்களை வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிடுகின்றனர். தேங்காய்களை வாங்கும் வியாபாரிகள் தங்களிடம் உள்ள உலர்கலன்கள் மூலம் உலர வைத்து அதிக விலைக்கு கொப்பரையை விற்று விவசாயிகளுக்கு சேரவேண்டிய லாபத்தை அவர்கள் பெற்று விடுகின்றனர். 

    இதனால் கொப்பரைக்கு பதிலாக தேங்காய்க்கு அரசு ஆதரவு விலை நிர்ணயித்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அனைத்து விவசாயிகளும் உலர்கலன்கள் அமைப்பது என்பது பொருளாதார அடிப்படையிலும், பொள்ளாச்சியின் தட்பவெட்ப நிலை அடிப்படையிலும் சாத்தியமில்லாமல் போய்விடுகிறது. ஆகவே கொப்பரைக்கு ஆதார விலை வழங்குவது என்பது அரசின் முயற்சியும், நோக்கமும் வீணாகிறது.

    தென்னை விவசாயிகள் கூறுகையில், அனைத்து விவசாயிகளும் தேங்காயை கொப்பரையாக மாற்ற உலர்கலன்கள் அமைக்க பொருளாதார ரீதியாக சாத்தியமில்லாமல் போகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை போன்ற தென்னை மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலங்களில் வெப்பம்குறைந்தே காணப்படும். ஆகவே தட்பவெட்ப நிலையும் கொப்பரையை உலர வைக்கமுடியாமல் போவதற்கு காரணமாக இருக்கும்.

    ஆகவே கொப்பரைக்கு பதிலாக தேங்காய்க்கு ஆதரவு விலை நிர்ணயித்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது கொள்முதல் மையங்களில் ரூ.105.90 அறசு விலை வழங்கிவருவதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியரும் அடிக்கடி கொப்பரை கொள்முதல் மையங்களை பயன்படுத்திக்கொள்ள அழைப்புவிடுக்கிறார். நாங்கள் தேங்காயை  கொப்பரையாக மாற்ற முடியாத நிலையில் உள்ளோம். 

    இதை புரிந்துகொண்டு கோவை மாவட்ட கலெக்டர் அரசுக்கு பரிந்துரை செய்து கொப்பரைக்கு பதிலாக நேரடியாக தேங்காய்க்கு ஆதரவு விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அரசின் முயற்சியும், நோக்கமும் வீணாகிவிடும் என்றனர்.
    Next Story
    ×