என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

    வெள்ளோடு அருகே மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    வெள்ளோடு அருகே மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு சி.எஸ்.ஐ. காலனியை சேர்ந்தவர் மரகதம் (வயது 85).இவரது கணவர் ராஜீ. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மரகதம் தனது தம்பி குடும்பத்துடன் வசித்து வந்தார். 

    கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரகதம் குளியலறையில் வழுக்கி விழுந்து அவரது இடுப்பு பின்பக்கம் முதுகு தண்டுவடத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மெதுவாகத் தவழ்ந்து சென்று கொண்டிருந்தார். 

    இந்நிலையில் சம்பவத்தன்று மரகதத்தின் தம்பி மகன் மரகதத்திற்கு காலை உணவு கொடுத்தார். பின்னர் மதிய உணவு கொடுப்பதற்காக வந்து பார்த்தபோது மரகதத்தை காணவில்லை.  அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வீட்டிற்கு கிழக்கு புறம் உள்ள ஊரின் பொது கிணற்றில் மரகதம் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரகதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    மரகதம் உடல்நலக்குறைவால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×