என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குழந்தைகள் முதியவர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்-கலெக்டர் வேண்டுகோள்

    நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதால் குழந்தைகள் முதியவர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 102 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதுநாள் வரையில் மிக உயர்ந்த வெப்பநிலையான 108.14 டிகிரி பதிவாகியுள்ளது. 

    இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் நாளை முதல் கத்தரிவெயில் காலம் தொடங்க உள்ளது. இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். 

    எனவே, முற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு செல்ல அவசியம் ஏற்பட்டால் உரிய பாதுகாப்புடன் அதாவது போதுமான குடிநீர், குடை, தொப்பி ஆகியவற்றுடன் செல்ல வேண்டும்.

    பொதுமக்கள் வெயில் காலங்களில் அடிக்கடி தண்ணீர் மற்றும் நீர்மோர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பொதுமக்கள் வெயில் காலங்களில் லேசான பருத்தி ஆடைகளை அணியுமாறும், இக்காலங்களில் இளநீர், நீர்ச்சத்துள்ள இயற்கையான பழவகைகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளுமாறும், செயற்கையான குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

    மேலும் கோடைகாலத்தில் ஒருவருக்கு சுய நினைவு இழப்பு ஏற்படும் போது அவருக்கு முதலுதவியாக முதலில் குளிர்ந்த இடத்திற்கு மாற்றம் செய்து உடல் சூட்டை குறைக்க அவர் மீது குளிர்ந்த தண்ணீர் தெளிக்க வேண்டும்.

    குடிதண்ணீர் வழங்க வேண்டும். பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    குறிப்பாக தினமும் மருந்துகளை எடுப்பவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் வெப்ப வாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் ஆவார்கள், இதன் அறிகுறிகள் அளவுக்கு அதிகமான வியர்வை அல்லது வியர்வை வராமல் இருப்பது, திடீர் மனநிலை மாற்றங்கள் இதய துடிப்பில் மாற்றங்கள் மயக்கம், தாகம், தலைவலி ஆகியவை அறிகுறிகளாக காணப்படும்.

    மேலும் இவ்வாறான நிலையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர், எலுமிச்சை சாறு, மோர் ஆகியவற்றை பருக வேண்டும். 

    மேலும் ஆடு, மாடு, கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளை நிழல் பகுதிகளில் வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவணம் அளித்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×