search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

    மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் அரசின் இந்த முடிவு பாரபட்சம் கொண்டது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    30-04-2022 அன்று மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில், தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்த ‘மகரிஷிசரக்சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கியத்தைக் கூறி மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்ததால் ஏற்பட்ட சர்ச்சையில், தவறேதும் இழைக்காத மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ. ரத்னவேலை காத்திருப்புப் பட்டியலில் தமிழ்நாடு அரசு வைத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

    இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவக் கல்லூரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்திலிருந்து தாங்கள் தான் இந்த புதிய உறுதிமொழியை தேர்ந்தெடுத்ததாகவும், வரவேற்பு விழா நடத்துவதற்கு போதியகால அவகாசம் இல்லாததால் பதிவிறக்கம் செய்த உறுதி மொழி படிவத்தை எந்தப் பேராசிரியரிடமும் தாங்கள் காண்பிக்கவில்லை என்றும், இது குறித்து கல்லூரி முதல்வருக்கு ஏதும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

    மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதேபோன்ற உறுதிமொழி பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எடுக்கப்பட்டதாகவும், அதற்காக யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

    இந்தச் சூழ்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல. அரசின் இந்த முடிவு பாரபட்சம் கொண்டதாகும்.

    ‘மகரிஷிசரக் சபத்’ உறுதிமொழி குறித்து வருகின்ற செய்திகளைப் பார்க்கும்போது, தமிழ்நாடு அரசு சார்பில் தெளிவான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்பதும், இந்த உறுதிமொழி படிக்கப்படுவது குறித்து யாரிடமும் மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்பதும், பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் இதுபோன்ற உறுதிமொழி ஏற்கெனவே எடுக்கப்பட்டபோது எவ்வித நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. இதன்மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிந்தே எந்தத் தவறும் செய்யவில்லை என்பதும் தெரிய வருகிறது.

    மருத்துவ மாணவர்கள் புதிய முறையில் உறுதி மொழி ஏற்ற நிகழ்ச்சி வருத்தம் அளிக்கும் செயலாக இருந்தாலும், அரசின் சார்பில் தெளிவான அறிவுரையை முன்கூட்டியே வழங்காதது இந்த நிகழ்வுக்கு ஒரு முக்கியக்காரணம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

    எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, தவறிழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, டாக்டர் ஏ. ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியமர்த்தவும், இனி வருங்காலங்களில் முன்கூட்டியே உரிய அறிவுரைகளை அரசின் சார்பில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×