என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நண்பரின் இறுதிசடங்கில் மோதல் தொழிலாளிக்கு பீர்பாட்டில் குத்து
வாலிபரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் சந்தோஷ்(34). இவர் கடந்த 26-ந்தேதி கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் உக்கடம் சி.எம்.சி காலனியில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மறுநாள் சந்தோசின் இறுதிசடங்கு நஞ்சுண்டாபுரம் மின்மயானத்தில் நடைபெற்றது. இதில் அவரது நண்பர் கெம்பட்டி காலனி பாளையந்தோட்டத்தை சேர்ந்த தொழிலாளி அங்குராஜ்(24) கலந்து கொண்டார். அப்போது அவருக்கும் செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த இஸ்மாயில்(24) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அவர்களுக்கிடையே முன் விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று அங்குராஜ் பேரூர் ரோடு பாரதி நகரில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த இஸ்மாயில் உள்பட 2 பேர் மீண்டும் அங்குராஜிடம் தகராறு செய்தனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அங்குராஜை தாக்கி தாங்கள் வைத்திருந்த பீர்பாட்டிலால் குத்தினர்.அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். காயமடைந்த அங்குராஜ் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் இஸ்மாயிலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.
Next Story