என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
பவானிசாகர் அருகே இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பவானிசாகர் அருகே இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானிசாகர் அடுத்த முடுக்கன்துறை பகுதியைச் சேர்ந்தவர் உமா. இவருக்கு பிரியா, நந்தினி(25) என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பிரியாவுக்கு மைசூரை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணமாகி வசித்து வருகிறார்.
2-வது மகள் நந்தினிக்கு எலத்தூரை சேர்ந்த ஆனந்தன் என்பவருடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி வசித்து வருகிறார்.
இந்நிலையில் நந்தினிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நந்தினிக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்று வலியால் துடித்த அவரை மைசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இல்லாததால் நந்தினியை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் நந்தினி தனது தாய் வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று நந்தினி தனது தாயிடம் வயிற்றுவலி காரணமாக வாழ்வதைவிட செத்துவிடலாம் என்று கூறி அழுதுள்ளார். அவருக்கு அவரது தாய் உன் வயிற்று வலியை குணப்படுத்தி விடலாம் என்று ஆறுதல் கூறினார். பின்னர் அவரது தாய் வீட்டுக்குப் பின் புறம் துணி துவைக்க சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது நந்தினி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினருக்கு தகவல் சொல்லி அவர்களும் நந்தினியை தேடினர். அப்போது அவரது தாய் வீட்டின் அருகே உள்ள மூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து நந்தினியின் தாய் அங்கு சென்று பார்த்தபோது அது நந்தினி என தெரியவந்தது. நந்தினி வயிற்று வலி காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (72). இவரது கணவர் 15 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவரது ஒரே மகள் மதுரையில் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வசித்து வருகிறார். சாந்தி மட்டும் தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சாந்தி பல்வேறு உடல் உபாதைகளால் அவதி அடைந்து வந்தார். மேலும் இடது கால் பாதத்தில் புண் ஏற்பட்டு வலியால் அவதி அடைந்து வந்தார். மேலும் அவரது மகள் கடந்த ஒரு வருடமாக தன்னை வந்து பார்க்கவில்லை என்று மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனவேதனை அடைந்த சாந்தி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






