search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையின் 2வது விமான நிலையம்- பண்ணூர், பரந்தூரில் அமைக்க மத்திய குழு விரைவில் ஆய்வு

    பண்ணூர் மற்றும் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இடத்தினை ஆய்வு செய்ய மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவை அதிகரித்து வருவதால் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

    அடுத்த சில ஆண்டுகளில் விமான சேவையை கையாள்வதில் ஏற்பட உள்ள சிக்கல்களை தவிர்க்க 2வது விமான நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

    தற்போது உள்ள விமான நிலையத்தை விட மேலும் அதிக விமானங்களை கையாளக் கூடிய வகையில் இந்த விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்து தர வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.

    அதைத் தொடர்ந்து பண்ணூர், பரந்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட 4 இடங்களை 2வது விமான நிலையம் அமைக்க அரசு குறிப்பிட்டு தெரிவித்தது. அதில் பண்ணூர் மற்றும் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இடத்தினை ஆய்வு செய்ய மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது.

    இந்த 2 இடங்களில் விமானங்களை இயக்கவும் பயணிகளுக்கு தேவையான வசதிகள் அளிக்கவும் வாய்ப்பு உள்ளதா? மண்ணின் தரம், சுற்றுச்சூழல் போன்றவற்றை இந்த ஆணையம் ஆய்வு செய்ய உள்ளது.

    இது குறித்து மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறுகையில, இந்திய விமான போக்குவரத்து ஆணையம் பண்ணூர், பரந்தூர் ஆகிய 2 இடங்களை புதிய விமான நிலையம் அமைக்க கண்டுபிடித்துள்ளது. விமான சேவையை அங்கு தொடங்குவதற்கு தேவையான அளவுள்ள இடங்கள், இயற்கையான சூழல் அங்கு அமைந்துள்ளது. ஆனாலும் அந்த 2 இடங்களும் விமானங்களை இயக்குவதற்கு உகந்த இடமா? என ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

    இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகம் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மீண்டும் ஒரு முறை சந்தித்து விவாதிக்க உள்ளனர். அதன் பின்னர் ஆய்வு இறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக இந்த 2 இடங்களிலும் ஆய்வு நடைபெற உள்ளது.

    Next Story
    ×