search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ
    X
    ஆட்டோ

    ஆட்டோ டிரைவர்கள் ஒரு வாரத்தில் விபரங்களை போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க உத்தரவு

    ஆட்டோ சங்கங்களில் உள்ள உறுப்பினர் அனைவரும் தங்களது விபரங்களை ஒரு வாரத்தில் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 27ந்தேதி முதல் ஆகஸ்ட் 10ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரு கின்றன.

    இந்த நிலையில் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி செய்யப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மது விலக்கு இணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் 50க்கும் மேற்பட்ட உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆட்டோ டிரைவர் சீருடை அணிவது கட்டாயம், அவரவர் ஆட்டோக்களில் உரிமையாளர் பெயர், செல்போன் எண்ணை எழுதி வைக்க வேண்டும், வெளிநாட்டவர் எவரேனும் போதை பொருட்கள் கேட்டாலோ, விற்பனை செய்தாலோ போலீசாருக்கு தகவல் தர வேண்டும், தலைமுடிகளை நேர்த்தியாக வெட்டி, காதில் கடுக்கன் போன்ற கம்மல்கள் போடாமல் “ஜென்டில்மேன்” போன்று இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

    மேலும் ஆட்டோ சங்கங்களில் உள்ள உறுப்பினர் அனைவரும் தங்களது விபரங்களை ஒரு வாரத்தில் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, அடுத்த மாதம் முதல் மாமல்லபுரம் நகரம், கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வந்து விடும். 24மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றனர்.
    Next Story
    ×