என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவலம் இரும்பு பாலத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    திருவலம் இரும்பு பாலத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள காட்சி.

    திருவலத்தில் ஆங்கிலேயர் கால இரும்பு பாலத்தில் இணைப்புகள் சீரமைப்பு- 20 நாட்கள் போக்குவரத்து தடை

    திருவலத்தில் ஆங்கிலேயர் கால இரும்பு பாலத்தில் இணைப்புகள் சீரமைக்கப்படுவதால் இன்று முதல் 20 நாட்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பேரூராட்சியில் பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ராஜேந்திரா இரும்பு பாலம் உள்ளது.

    இந்த பாலத்தில் பல்வேறு மொழிகளை சேர்ந்த சினிமாக்கள் மற்றும் டிவி சீரியல்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பலர் இரும்பு பாலத்தில் செல்பி எடுத்துச் செல்வார்கள். இந்த பாலத்திற்கு மிக அருகே பொன்னையாறு-பாலாறு கலக்கிறது.

    காட்பாடி நெடுஞ்சாலைத்துறையின் (கட்டுமானம் பணி மற்றும் பராமரிப்பு) கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் கனமழை காரணமாக பொன்னையாற்றில் அபாய அளவுக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாலத்தில் உள்ள தார் சாலை வெகுவாக பாதித்துள்ளது. 

    ஆங்காங்கே விரிசல்களும் உருவாகியுள்ளன. குறிப்பாக கான்கிரீட் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. கம்பியில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது.

    கடந்த 4 மாதங்களில் பலர் விபத்தில் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இன்று முதல் இரும்பு பாலத்தில் உள்ள 11 இணைப்புகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் இன்று காலை முதல் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுகந்தி கூறுகையில்சு மார் 10 ஆண்டுகளுக்கு பிறகு திருவலம் இரும்பு பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. பாலத்தில் உள்ள 11 இணைப்புகளை கான்கிரீட் கலவை கொண்டு சீரமைக்க வேண்டும்.

    இந்த காங்கிரீட் இணைப்புகள் முழுவதுமாக அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர 20 நாட்கள் வரை ஆகலாம். அதுவரை பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.
    Next Story
    ×