என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அனைத்து வாக்குறுதியும் நிறைவேற்றப்படும்-முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி

    மத்திய அரசின் உதவியோடு அனைத்து வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
    புதுச்சேரி 

    புதுவை சுகாதாரத்துறையின் கீழ் உள்ள சுகாதார  நலவழிமையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    இதை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும். இதை முதல்-அமைச்சர் ரங்கசாமி கேபினட் அறையில் தொடங்கி வைத்தார். 
    பின்னர் முதல்- அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரூ.17 லட்சம் செலவில் புதுவையில் 21 ஆரம்ப சுகாதார நிலையம், நலவழி மையங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இணைக்க ப்பட்டுள்ளது.

    இதன்மூலம் நோயாளிகள் எவ்வாறு கவனிக்கப்படுகிறார்கள்? அவர்களுக்கு என்ன மருத்துவ வசதிகள் தரப்படுகிறது? என அறியலாம். 

    காரைக்காலிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும். உயர் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் அரசு உருவாக்கி வருகிறது. 

    சுகாதாரத்துறை மூலம் நாளை முதல் 3 நாட்களுக்கு மத்திய சுகாதாரத்துறையின் மூலம் சுகாதார திருவிழா நடத்தப்படுகிறது. நாளை மதியம் 12.30 மணிக்கு தொடங்கி நாள்தோறும் இரவு 8 மணி வரை திருவிழா நடைபெறும். இதில் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். 

    நோயாளிகள் தங்களுக்கு தேவையான சந்தேகங்கள், மருத்துவ ஆலோசனைகளையும் பெறலாம். சுகாதார திருவிழாவில் கண்காட்சியும் அமைத்துள்ளோம். கண்காட்சியில் பாரம்பரிய உணவு முறைகள், சத்தான உணவு வகை பற்றிய காட்சிகள் இடம்பெறும். 

    பேனர் தடை சட்டத்தை அமல்படுத்த அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். பேனர்களும் அகற்றப்பட்டு வருகிறது. மத்திய மந்திரி அமித்ஷாவிடம் மாநில அந்தஸ்து, கூடுதல் நிதி கேட்டு வலியுறுத்தியுள்ளோம். 

    அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி கிடைக்கும். கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலர் இணைந்து செயல்பட வேண்டும். ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுதான் ஆகிறது. 

    தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம், புதிதாக 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை, ரூ.500 உதவித்தொகை உயர்வு, இலவச அரிசி, பொங்கல் பொருட்கள், பண்டிகை கால துணிகள் வழங்கியுள்ளோம். இன்னும் 4 ஆண்டு மீதமுள்ளது. 

    ஒரே ஆண்டில் 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப முடியாது. அடுத்தபடியாக எல்.டி.சி.யூ.டி.சி. தேர்வு நடத்த உள்ளோம். சுருக்கெழுத்தர் தேர்வு நடைபெற உள்ளது. 
    சுகாதாரத்துறையில் டாக்டர்கள், நர்சுகள் எடுத்துள்ளோம். ஊழியர்கள்மேலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    தலைமை செயலரின் புதுவை பணிக்காலம் நிறைவுபெற்றதால் மத்திய உள்துறை மாற்றம் செய்துள்ளது. மத்திய அரசின் உதவியோடு அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம்.

    பிரதமர் மோடி வாக்குறுதியளித்தபடி சிறந்த புதுவையாக மாற்ற மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.

    கோப்பு படம்
    Next Story
    ×