என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம் அருகே விபத்து: தந்தை-6 மாத குழந்தை பலி
மதுராந்தகம்:
மதுரையை சேர்ந்தவர் அஸ்வினிகுமார் (வயது 28). இவரது மனைவி சிவ பாக்கியம் (23). இவர்களது மகள் திவானா(2) மற்றும் அவர்களுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் அஸ்வினி குமார் குடும்பத்துடன் காரில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார்.
பின்னர் இன்று அதிகாலை அவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து மதுரை நோக்கி காரில் புறப்பட்டார். அஸ்வினி குமார் காரை ஓட்டிச்சென்றார்.
மதுராந்தகம் அருகே புக்கதுறை கூட்டு சாலை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது அவ்வழியே வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அஸ்வினி குமாரும், அவரது 6 மாத ஆண் குழத்தையும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும், அவரது மனைவி சிவபாக்கியம், மகள் திவானா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
தகவல் அறிந்ததும் படாளம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடிய சிவபாக்கியத்தையும், திவானாவையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 2 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






