என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பெரம்பலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை?

    தொழில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் மர்மநபர்கள் ரெங்கராஜை வெட்டி கொலை செய்துவிட்டு இதனை ஒரு விபத்து போல் நாடகம் ஆடுவதற்காக இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி விட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 47). அ.தி.மு.க. பிரமுகரான இவர் நாரணமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ஆவார். அரசு ஒப்பந்த பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் ரெங்கராஜ் தொழில் சம்பந்தமாக தனக்கு வேண்டப்பட்டவரை சந்திப்பதற்கு ஆலத்தூர் கேட் பகுதிக்கு வந்திருந்தார். பின்னர் தனது பணிகளை முடித்து விட்டு மீண்டும் அங்கிருந்து வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

    ஆலத்தூர் கேட்டில் இருந்து குறுக்கு பாதையான காரை வழியாக நாரணமங்கலம் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.

    இதனால் பதட்டம் அடைந்த அவரது மனைவி அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் துணையோடு அக்கம்பக்கத்தில் பார்த்து வருமாறு கூறினார். இதையடுத்து அவர்களும் பல்வேறு இடங்களுக்கு தொடர்பு கொண்டு ரெங்கராஜ் குறித்து விசாரித்தனர். ஆனால் யாரும் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர்.

    இந்த நிலையில் நாரணமங்கலம், காரை ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட குறுகிய சாலையில் ரெங்கராஜ் ரத்த வெளத்தில் பிணமாக கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாடாலூர் போலீசார் பார்த்த போது ரெங்கராஜ் உடலில் ஏராளமான காயங்கள் இருந்தன. மேலும் அவரது பின்னந்தலையில் அரிவாளால் வெட்டப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. ஆனால் இது விபத்துதான் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அதே நேரத்தில் அவரது இருசக்கர வாகனத்தின் வலது கைப்பிடி சேதமடைந்து காணப்பட்டது. அதன் மூலம் விபத்தில் ரெங்கராஜ் உயிரிழந்ததாக போலீசார் உறுதிபட கூறினர். ஆனால் அரிவாள் வெட்டு காயம் இருப்பதால் இது கொலை தான் என்று உறவினர்கள் மற்றும் நாரணமங்கலம் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    நள்ளிரவில் பொதுமக்கள் பலர் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தொழில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் மர்மநபர்கள் ரெங்கராஜை வெட்டி கொலை செய்துவிட்டு இதனை ஒரு விபத்து போல் நாடகம் ஆடுவதற்காக இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி விட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    அதே வேளையில் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் இது கொலையா அல்லது விபத்தா? என்பது உறுதிப்படுத்தப்படும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை உடனடியாக தொடங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×