search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரையில் வீடுகளில் நகைகளை கொள்ளையடித்த பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

    மதுரையில் வீடுகளில் நகைகளை கொள்ளையடித்த பள்ளி மாணவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை சுப்பிரமணியபுரம், வசந்தம் நகர், ஆண்டாள்புரம் ஆகிய இடங்களில் பூட்டி கிடந்த 2 வீடுகள், ஒரு செல்போன் ரீசார்ஜ் கடை ஆகியவற்றில் கடந்த மாதம் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது.

    இதில் ஆண்டாள்புரம், வசந்தநகர் பகுதியில் ஸ்ரீதரன் (வயது33) என்பவரது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள் கொள்ளை போனது. இதில் பாதிக்கப்பட்ட ஸ்ரீதரன் உள்ளிட்ட 3 பேர்‌ சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்த கொள்ளை சம்பவங்களில் துப்பு துலக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மதுரை மாநகர தெற்கு துணை கமி‌ஷனர் தங்கதுரை தலைமையில் திடீர்நகர் உதவி கமி‌ஷனர் ரவீந்திர பிரகாஷ், சுப்பிரமணியபுரம் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் மணிகுமார் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    ஸ்ரீதரன் வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளை நடந்த வீட்டின் அருகில் வாலிபர் ஒருவரும், 16 வயது சிறுவன் ஒருவனும் சந்தேகத்துக் கிடமான நிலையில் நடமாடு வது தெரியவந்தது.

    அதில் வாலிபர் ஒரு வீட்டின் மதில் சுவரை தாண்டி குதிப்பது போலவும், சிறுவன் மக்கள் நடமாட்டம் உள்ளதா? என்று கண்காணித்து சொல்வது போலவும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் ஆண்டாள்புரம் ஓதுவார் மடத்தை சேர்ந்த கணேசன் (22 ) என்பதும், அவன் திருச்சி சென்று உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. தனிப்படை போலீசார் கணேசனை கைது செய்தனர்.

    விசாரணையில் அவனுக்கு உடந்தையாக கரிமேடு முரட்டான்பத்திரி பகுதியை சேர்ந்த மீனா (40), அனுஷியா (19) மற்றும் 16 வயதான பிளஸ்1 மாணவன் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கணேசன், மீனா, அனுஷியா மற்றும் பிளஸ் 1 மாணவன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் தங்க நகையை உருக்கி விற்பனை செய்துள்ளனர். கொள்ளை கும்பலிடம் இருந்து போலீசார் ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த கொள்ளையில் விரைந்து துப்பு துலக்கிய தனிப்படை போலீசாரை மாநகர கமி‌ஷனர் செந்தில் குமார் வெகுவாக பாராட்டினார். கைது செய்யப்பட்டுள்ள பிளஸ்-1 மாணவன் ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த போது பிடிபட்டுள்ளான்.

    Next Story
    ×