என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
நீலகிரியில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுப்பவர்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டம்
நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கான நடவடிக் கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
ஊட்டி:
மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் காலி மது பாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் காட்சிகள் வெளியாகின.
இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் மது பானங்களை பயன்படுத்திய பின்னர் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாகவும் கருத்து தெரிவித்திருந்த நீதிபதிகள், இந்த கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக ஏப்ரல் 25&ந் தேதிக்குள் மாற்றுத் திட்டம் வகுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினர்.
இதன் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் கூடுதல் செயலாளர் எஸ்.கே பிரபாகர் நீலகிரி மாவட்ட டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு ஒரு உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட வேண்டும் என்றும், காலி மது பாட்டில்களை மீண்டும் மதுபான கடைகளிலேயே திருப்பி செலுத்தினால் பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில், இந்த மது பாட்டில் நீலகிரியில் விற்பனை செய்யப்பட்டது என்பதற்கான முத்திரை இடம் பெற வேண்டும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கான நடவடிக் கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இன்றே இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க் கப்படுகிறது.
தமிழக அரசின் இந்த செயலை சுற்றுச்சூழல், வனவிலங்குகள் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், அரசுக்கு தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
Next Story






