என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    2.5 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு பூஜ்யம்

    தஞ்சை மாவட்டத்தில் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு பூஜ்யம் தற்போது 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா தினசரி பாதிப்பு உச்சத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக தொற்று குறைய தொடங்கியது. 
    கடந்த 4 மாதங்களாக தினசரி பாதிப்பு 10-க்கும் கீழ் சரிந்தது. உயிரிழப்பும் இல்லை. குறிப்பாக கடந்த 1 மாதமாக தினசரி பாதிப்பு 1 என்ற அளவிலே இருந்தது. 

    இந்த நிலையில் தமிழக சுகாதார துறையினரால் நேற்று வெளியிடப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான பட்டியலில் தஞ்சை மாவட்டத்தில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இதனால் பூஜ்யம் இடம் பெற்றிருந்தது. 

    அதாவது மாவட்டத்தில் நேற்று வந்த பரிசோதனை முடிவில் யாருக்கும் தொற்று இல்லை. கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து அதாவது 2020&-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தஞ்சை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு இருந்து கொண்டே இருந்தது. 

    தற்போது தான் முதன் முறையாக 2.5 ஆண்டுகளுக்கு பிறகு தினசரி பாதிப்பு பூஜ்யம் என்று பதிவாகி உள்ளது குறிப்பிடதக்கது. இதற்கிடையே நேற்று ஒருவர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். நேற்று உயிரிழப்பு இல்லை. தற்போது 5 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 92 ஆயிரத்து 162 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டிருந்தனர். இதுவரை 1039 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். 
    முன்னெச்சரிக்கை நடவடிக்கை  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

    இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும்  முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதமும் விதிக்க உத்தரவிடபட்டுள்ளது. மருத்துவமனைகளில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இது குறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி டீன் ரவிக்குமார் கூறும்போது:
    தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 1600 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பெட் உள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு ஒருவேளை மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கினால் மருத்துவமனையில் தேவையான அளவுக்கு பெட் வசதி உள்ளது. சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. 

    கொரோனாவை வெல்வதில் தடுப்பூசி பேராயுதமாக விளங்குகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். இரு தவணையும் குறிப்பிட்ட  கால இடைவெளியில் செலுத்த வேண்டும். 

    மேலும் அரசு கூறியப்படி தகுதி வாய்ந்தவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்த வேண்டும். தனி மனித இடைவெளி, முகக்கவசம் அவசியம். அரசு கூறிய வழிக்காட்டு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றினாலே கொரோனா பரவலை தடுக்கலாம் என்றார்.
    Next Story
    ×