என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி மாரியம்மன்
    X
    ஊட்டி மாரியம்மன்

    கண்ணாடி பல்லக்கில் வீதி உலா வந்த ஊட்டி மாரியம்மன்

    அம்மன் கண்ணாடி பல்லக்கில் ஊஞ்சல் உற்சவத்தில் திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    ஊட்டி: 

    ஊட்டி நகரின் மையப்பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. 

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும். கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது.

     20-ந் தேதி காப்பு கட்டப்பட்டு அன்று முதல் நேற்று  வரை நாள்தோறும் ஒவ்வொரு சமூகத்தார் சார்பில் மாலையில் தேர் ஊர்வலம்  நடைபெற்று வந்தது

    இதில் மாரியம்மன் ஆதிபராசக்தியாக, துர்க்கையாக, காமாட்சியம்மனாக, பகவதியாக, கருமாரியாக, ராஜராஜேஸ்வரியாக, ஹெத்தையம்மனாக, மகாலட்சுமிளாக என பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் ஊர்வலமாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த தேர்த்திருவிழாவின் கடைசி உபய திருவிழா நேற்று நடந்தது.அதனையொட்டி அம்மனுக்கு காலை 9 மணிமுதல் 11.30 மணிவரை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 12.30 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலை 6.30 மணிக்கு தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மன் கண்ணாடி பல்லக்கில் ஊஞ்சல் உற்சவத்தில் திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் போயர் சமுதாய உபய நிர்வாகிகள் சுப்ரமணியம், பாலசுப்ரமணியம், குணசேகரன் ரவி, தங்கராஜ், சிறப்பு விருந்தினர்களாக நீலகிரி மாவட்ட போயர் சமூக பொதுநல சங்க தலைவர் ராயப்பன், செயலாளர் முருகன், பொருளாளர் நந்தகுமார், அ.தி.மு.க. அமைப்புசாரா ஓட்டுநர் அணி ஊட்டி நகர செயலாளரும் நொண்டிமேடு கிளை செயலாளருமான கார்த்திக், ராஜ்குமார், ஹரிகிருஷ்ணன், ரகுபதி, ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

    விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கோவில் முன்பிருந்து புறப்பட்ட தேர் லோயர்பஜார், மின்வாரிய ரவுண்டானா, மெயின் பஜார், ஐந்துலாந்தர், எம்.எஸ்.லைன், காபிஹவுஸ், கமர்சியல் சாலை, மார்க்கெட் மணிகூண்டு வழியாக இரவு சுமார் 10 மணிக்கு திருக்கோயிலை சென்றடைந்தது.
    Next Story
    ×