என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்றத்தூர் முருகன் கோவில்
    X
    குன்றத்தூர் முருகன் கோவில்

    குன்றத்தூர் முருகன் கோவிலில் 25-ந்தேதி கும்பாபிஷேகம்- 10 நிமிடத்துக்கு ஒரு பஸ்விட ஏற்பாடு

    தாம்பரம், பூந்தமல்லி, அய்யபன்தாங்கல் ஆகிய இடங்களில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பஸ் குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    பூந்தமல்லி:

    சென்னை குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கோவில் புதுப்பித்து சீரமைக்கப்பட்டது.

    இதையடுத்து கும்பாபிஷேகம் விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. 25-ந் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் ரத்னகிரி தலத்திற்கு பாலமுருகனடிமை சாமிகள் மற்றும் திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுரம் ஆதின சுவாமிகள் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார்கள்.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். கும்பாபிஷேகத்தின் போது கோவில் வளாகத்துக்குள் 400 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கும்பாபிஷேகத்தை காண சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தாம்பரம், பூந்தமல்லி, அய்யபன்தாங்கல் ஆகிய இடங்களில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பஸ் குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு இயக்கப்படுகிறது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன.

    கோவிலை சுற்றி 5 இடங்களில் தண்ணீர் தொட்டி வைத்து பக்தர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் பக்தர்கள் கோவிலுக்கு படிஏறி செல்லும் இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள்ளும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக கோவிலுக்கு பின்புறம் 6 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் செந்தாமரை கண்னன், கோவில் அலுவலர் அமுதா ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×