என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்த காட்சி.
பைத்தியக்காரன் போல வேடமணிந்து நள்ளிரவில் மாடுகளை திருட வந்த வடமாநில வாலிபர்
கலசப்பாக்கத்தில் பைத்தியக்காரன் போல வேடமணிந்து நள்ளிரவில் மாடுகளை திருட வந்த வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டிவைத்தனர்.
கலசபாக்கம்:
கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் வெளிமாநிலத்தவர்கள் பைத்தியக்காரன் போல் வேடம் அணிந்து பகல் நேரங்களில் உலா வருகின்றனர்.
விவசாய நிலங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ள விலை உயர்ந்த பசுமாடுகளை நோட்டமிடுகின்றனர். பின்னர் இரவு நேரங்களில் மினி லாரி போன்ற வாகனங்களை கொண்டுவந்து அதில் ஏற்றி சென்று விடுகின்றனர்.
இது சம்பந்தமாக கலசப்பாக்கம் போலீசாருக்கு பல விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கலசபாக்கம் அடுத்த பெரியகிளாம்பாடி ஊராட்சியில் நேற்று மாலை வாகனம் ஒன்றில் இருந்து வெளிமாநில வாலிபர் ஒருவரை இறக்கி விட்டு அந்த வண்டி உடனடியாக அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது.
வண்டியிலிருந்து இறங்கிய வெளிமாநில வாலிபர் பார்ப்பதற்கு பைத்தியக்காரன் போல் இருந்துள்ளான். இதுபற்றி கண்டுகொள்ளாத அப்பகுதி விவசாயிகள் தங்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இரவில் பெரியகிளாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவில் அருகில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பசுமாட்டை பிடித்துள்ளார். இதை பார்த்த விவசாயி எதற்கு மாட்டை பிடிகிறாய் என்று கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் விவசாயியை தாக்கியுள்ளார். இதில் அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் கம்பத்தில் கட்டி வைத்து, கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து வெளிமாநிலத்தை சேர்ந்த வாலிபரை விசாரணை செய்து பார்த்ததில் அவன் கழுத்தில் பல்வேறு கைகளை தொங்கவிட்டு இருந்தபடியும் மற்றும் அவன் வைத்திருந்த பையில் செல்போன் மற்றும் கூர்மையான கம்பிகளையும் வைத்து இருந்ததை போலீசார் பார்த்தனர்.
மேலும் அவனிடம் விசாரணை செய்தபோது அவன் ஹிந்தியில் பேசியுள்ளார்.
போலீசாருக்கு புரியாமல் அந்த வாலிபரை நீங்கள் யாராவது பைக்கில் அழைத்து வந்து ஸ்டேஷனுக்கு விடுங்கள் என்று பொதுமக்கள் இடம் போலீசார் கூறினர்.
பொதுமக்கள் அந்த வாலிபரை பைக்கில் நாங்கள் எப்படி அழைத்து வர முடியும். அவன் ஏற்கனவே எங்களை தாக்கி உள்ளான் பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது.
இதனால் எங்களால் அவனை அழைத்து வர முடியாது என பொதுமக்கள் கூறியுள்ளனர் போலீசார் நாங்கள் மட்டும் எப்படி அழைத்துச் செல்வது என்று கூறிவிட்டு இவன் ஒரு பைத்தியக்காரன் விட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மாடு திருடிய வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தும் கண்டுகொள்ளாமல் போலீசார் சென்று விட்டதால் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Next Story






