என் மலர்
உள்ளூர் செய்திகள்

பசுமை வீடுகளை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடநாடு, எப்பநாடு ஊராட்சிகளில் ரூ.1.41 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
சொக்கநல்லி கிராமத்தில் பழங்குடி மக்களுக்கான பசுமை வீடுகள் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
ஊட்டி:
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடநாடு, எப்பநாடு ஊராட்சிகளில் ரூ. 1.41 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடநாடு பகுதியில் உள்ள சொக்கநல்லி கிராமத்தில் பழங்குடி மக்களுக்கான பசுமை வீடுகள் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் 20 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
எப்பநாடு ஊராட்சிக்கு உள்பட்ட ஆனைக்கட்டி கிராமத்தில் பழங்குடி மக்களுக்கு ரூ.81 லட்சம் மதிப்பில் 27 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
மொத்தம் ரூ. 1 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த வளர்ச்சிப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறும், அவ்வாறு கட்டப்பட்டு வரும் வீடுகளில் மழை நீர்த் தொட்டிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அலுவலர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நமது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களின் தேவைக்கேற்ப 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் இதுபோன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், நந்தகுமார், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமாரமங்கலம், ஸ்ரீதரன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story






