என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு ஆஸ்பத்திரி ஊழியரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ள தீயணைப்புத்துறையினர்.
அரசு ஆஸ்பத்திரி ஊழியரை தேடும் பணி தீவிரம்
கீழ்பவானி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியரை போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் இன்று 2-வது நாளாக தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
கீழ்பவானி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியரை போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் இன்று 2-வது நாளாக தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). இவர் மேட்டுப் பாளையம் அரசு மருத்துவ மனையில் லேப் டெக்னீசி யனாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் பவானிசாகர் அணை பகுதிக்கு வந்தார். தொடர்ந்து அவர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பண்ணை அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க் காலில் 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் வாய்க்காலின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரை புரண்டு சென்று கொண்டு இருந்தது.
இந்த நிலையில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டு இருந்ததால் வாய்க்காலில் குளித்து கொண்டு இருந்த ராஜேந்திரன் நிலை தடுமாறி வாய்க்காலில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தார். தொடர்ந்து அவர் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் உதவியுடன் வாய்க்காலில் இறங்கி அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து ராஜேந்திரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி இன்று 2-வது நாளாக ராஜேந்திரனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Next Story






