என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் படிக்கட்டில் சாகச பயணம்
    X
    அரசு பஸ் படிக்கட்டில் சாகச பயணம்

    செங்கோட்டை அருகே அரசு பஸ் படிக்கட்டில் சாகச பயணம்: தவறி விழுந்து 2 மாணவர்கள் காயம்

    செங்கோட்டையை அடுத்த கட்டளைகுடியிருப்பு பகுதியில் பஸ் சென்றபோது எதிர்பாராதவிதமாக படிக்கட்டில் தொங்கிக்கொண்டிருந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் 2 மாணவர்கள் தவறி சாலையில் விழுந்தனர்.
    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் தென்காசியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் புளியரையில் இருந்து தென்காசிக்கு தடம் எண்-31 என்ற எண் கொண்ட அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.

    புளியரை அருகே உள்ள தெற்குமேடு பஸ் நிறுத்தத்தில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்சில் ஏறி உள்ளனர். அப்போது மாணவிகள் முன்பக்கம் வழியாகவும், மாணவர்கள் பின்பக்க படிக்கட்டு வழியாகவும் ஏறி உள்ளனர்.

    பஸ்சில் உள்புறமாக இடம் இருந்துள்ளது. உடனே கண்டக்டர், மாணவர்களை பஸ்சுக்குள் வருமாறு கூறியுள்ளார். ஆனாலும் மாணவர்கள் அதனை கேட்காமல் வாசல் படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர். செங்கோட்டையை அடுத்த கட்டளைகுடியிருப்பு பகுதியில் பஸ் சென்றபோது எதிர்பாராதவிதமாக படிக்கட்டில் தொங்கிக்கொண்டிருந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் 2 மாணவர்கள் தவறி சாலையில் விழுந்தனர்.

    விழுந்த வேகத்தில் அவர்கள் 2 பேரும் சாலையில் உருண்டபடி ஓரமாக சென்று விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக பஸ்சின் பின்புறம் வந்த வாகனங்களில் சிக்காமல், சிறு காயங்களுடன் மாணவர்கள் உயிர் பிழைத்தனர்.

    அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் 2 மாணவர்களையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த சம்பவங்களை பஸ்சின் பின்னால் லாரியில் வந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    Next Story
    ×