என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி அறிவாளர் பேரவையின் 2022--23 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா
    X
    திருச்சி அறிவாளர் பேரவையின் 2022--23 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா

    கல்வி கொள்கை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அமைப்பாக பேரவை செயல்பட வேண்டும்

    கல்வி கொள்கை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அமைப்பாக பேரவை செயல்பட வேண்டும் என்று முன்னாள் துணை வேந்தர் தெரிவித்தார்.
    திருச்சி :

    திருச்சி அறிவாளர் பேரவையின் 2022-23 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா திருச்சி தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்றது. விழாவில் மதுரை காமராசர் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் கற்பககுமரவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளைப் பாராட்டி பேசினார்.

    அவர் தனது உரையில், திருச்சி மாநகருக்கு மலைக்கோட்டை, காவிரி ஆறு, ஸ்ரீரங்கம் கோவில் போல் அறிவாளர் பேரவையும் ஒரு அடையாளமாகத் திகழ்கிறது. 23&வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த அமைப்பு, முந்தைய ஆண்டுகளின் நிர்வாக அனுபவங்களையும்- ஆலோசனைகளையும் பெற்று சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

    நிர்வாகம் என்பது ஒரு கலை. அதை லாவகமாகக் கையாள வேண்டும். எதிர்ப்படும் சிக்கல்களைக் கண்டு அஞ்சாது எதிர்கொண்டு அதனை வென்றிட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டுச் செல்கிறோம் என்பதுதான் முக்கியம். ஆகவே இளைஞர்களைத் தம்மோடு இணைத்துக்கொண்டு செயல்படவேண்டும்.

    எதிர்காலத்தில் எந்தெந்த வகையில் சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்காக செயல்படப் போகிறோம் என்பதற்கு முன்னதாகவே ஒரு செயல் திட்டத்தினை தீட்டி அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும். மாநிலத்தின் கல்விக்கொள்கை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லக்கூடிய ஒரு அமைப்பாக இப்பேரவை செயல்பட வேண்டும்.

    அவ்வாறாக செயல்படக்கூடிய ஆற்றல் இப்பேரவைக்கு உண்டு என்று கூறி, புதிய நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பாராட்டுக்களைத் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் காரைக்குடி சாந்தி நிகேதன் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் செல்வராணி, பெரியார் அரசு கலைக்கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர். சுப்ரமணியம், தூய வளனார் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெஸ்கி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக தலைவராகப் பொறுப்பேற்ற தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக தமிழ்ப்பேராசிரியை முனைவர் திலகவதி, பொதுச்செயலாளர் தமிழ்ச்செம்மல்- கவிஞர் கோவிந்தசாமி, பொருளாளர் லால்குடி முருகானந்தம், துணைத்தலைவர்கள் முனைவர் செயலாபதி, நல்லாசிரியர் ராசேந்திரன், இணைச்செயலாளர் மல்லிகா, மக்கள் தொடர்பாளர் முனைவர் சீனிவாசன்,

    செயற்குழு உறுப்பினர்கள் பேராசிரியை ஜமுனா ராணி, புலவர் தமிழாளன், கவிஞர் மாரிமுத்து, லால்குடி திருமாவளவன், யோகா விஜயகுமார் ஆகியோரை அறிமுகப்படுத்தியும், கடந்த ஆண்டு நிர்வாகிகள் தலைவர் கதிரேசன், பொதுச்செயலாளர் நொச்சியம் சண்முகநாதன், பொருளாளர் துரை.வெங்கடேசன் உள்ளிட்டோரை வாழ்த்தி நன்றி தெரிவித்தும்,

    விழாவில் வாழ்த்துரை வழங்கிய முனைவர் சுப்ரமணியம், முனைவர் செல்வராணி, முனைவர் பெஸ்கி ஆகியோரை அறிமுகப்படுத்தி பேரவையின் ஆலோசகர் முனைவர் அசோகன் விரிவுரை ஆற்றினார்.

    புதிய நிர்வாகிகள் சார்பில் பேரவைத் தலைவர் முனைவர் திலகவதி ஏற்புரை நிகழ்த்தினார். முடிவில் பொதுச்செயலாளர் கவிஞர் கோவிந்தசாமி நன்றி கூறினார். முன்னதாக விழா தொடக்கத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறை மாணவர்களின் கண்கவர் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
    Next Story
    ×