என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
ஓட்டல் அதிபர் வீட்டில் 3 மாதங்களாக திருடினோம்- கைதான வேலைக்கார பெண்கள் வாக்குமூலம்
நாகர்கோவில் அருகே ஓட்டல் அதிபர் வீட்டில் 72 பவுன் நகைகளையும் 3 மாதங்களாக திருடியதாக கைதான வேலைக்கார பெண்கள் வாக்குமூலம் அளித்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு முதல் புதுத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 70). ஓட்டல் அதிபர். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
மகள்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். வீட்டில் ஆனந்தனும், மனைவியும் வசித்து வந்தனர். இவர்களது வீட்டு வேலைகளை நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஸ்வரி (25). மயிலாடியைச் சேர்ந்த அனிதா (40) ஆகிய இருவரும் செய்து வந்தனர்.
இந்நிலையில் ஆனந்தன் வீட்டில் இருந்த 72 பவுன் நகை திருடப்பட்டது. இதுகுறித்து ஆனந்தன் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
ஆனந்தனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் வீட்டு வேலைக்கார பெண்கள் அனிதா, மகேஸ்வரியிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார்கள்.
சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் இருவரிடமும் தனித்தனியாக நடத்திய விசாரணையில் ஆனந்தன் வீட்டில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து போலீசார் அனிதா, மகேஷ்வரி இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:-
ஓட்டல் அதிபர் ஆனந்தன் வீட்டில் நாங்கள் வீட்டு வேலைகளை கவனித்து வந்தோம். நாங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகியதையடுத்து அவர்கள் எங்களை வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு உரிமை கொடுத்தனர்.
இதை எடுத்து நாங்கள் வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்றோம். அப்போது ஆனந்தன் வீட்டில் நகை இருப்பதை பார்த்தோம். இதை திருடி விட்டால் சந்தோசமாக வாழலாம் என்று எங்கள் மனதில் எண்ணம் தோன்றியது.
பண ஆசையின் காரணமாக நகைகளை திருட முடிவு செய்தோம். நகைகள் வைக்கப்பட்ட அந்த பீரோ இருக்கும் இடமும் எங்களுக்கு தெரியும் இதை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்தோம்.
ஆனந்தனும், அவரது மனைவியும் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டில் இருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடினோம். கடந்த 3 மாதமாக நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடி சரிபாதியாக பங்கு வைத்து எடுத்து கொண்டோம். சம்பவத்தன்று ஆனந்தனின் மனைவி நெக்லஸ் நகையை தேடிய போது அதைக் காணவில்லை.
அப்போதுதான் அவர்களுக்கு நகை காணாமல் போன விவரம் தெரிய வந்தது. பின்னர் நகைகளை கணக்கிட்டுப் பார்க்கும் போது 72 பவுன் நகை மாயமாகி விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நாங்களும் நகைகளை அவருடன் சேர்ந்து தேடினோம். போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கிக் கொண்டோம். பணத்திற்கு ஆசைப்பட்டு தவறு செய்து விட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அனிதா, மகேஸ்வரி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் இருவரும் தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Next Story






