search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் நள்ளிரவில் பவனி வந்த புஷ்ப பல்லக்குகள்
    X
    வேலூரில் நள்ளிரவில் பவனி வந்த புஷ்ப பல்லக்குகள்

    சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூரில் நள்ளிரவில் பவனி வந்த புஷ்ப பல்லக்குகள்

    சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூரில் நள்ளிரவில் புஷ்ப பல்லக்குகள் பவனி வந்தது.
    வேலூர்:

    வேலூரில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று புஷ்ப பல்லக்குகள் பவனியால் விழா களைகட்டும். அன்றைய தினம் இரவு வேலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரியில் இருந்தும் திரளான பக்தர்கள் விழாவை காண வேலூரில் கூடுவது வழக்கம்.

    இதனால் வேலூர் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த நிலையில் கோரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புஷ்ப பல்லக்கு விழா நடைபெறவில்லை இந்த ஆண்டு கொரோனா கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டு சித்ரா பவுர்ணமியை யொட்டி புஷ்ப பல்லக்கு விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோவிலில் இருந்து அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் புஷ்பப் பல்லக்கு, அரிசி மண்டி வியாபாரிகள் சார்பில் வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் புஷ்ப பல்லக்கு, வெல்லமண்டி வியாபாரிகள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோவில் பல்லக்கு, மோட்டார் வாகன பணிமனை உரிமையாளர்கள் சார்பில் காட்பாடி ரோடு விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் புஷ்ப பல்லக்கு, 

    வாணியர் வீதி கனகதுர்க்கை அம்மன் கோவில் பல்லக்கு, புஷ்ப கமிஷன் வியாபாரிகள் சார்பில் வேம்புலி அம்மன் கோவில் புஷ்ப பல்லக்கு, புஷ்ப தொழிலாளர்கள் சார்பில் அரச மரப்பட்டை லட்சுமி நாராயண சாமி கோவிலில் இருந்து பூப்பல்லக்கு ஆகிய பல்லக்குகள் வண்ண மின் விளக்கு களாலும் மலர் களாலும் அலங்கரிக்கப்பட்டு பவனி வந்தது-. 

    விழாவை யொட்டி வேலூரில் 4 இடங்களில் இன்னிசைக் கச்சேரி நடந்தது. திரளான பக்தர்கள் இன்னிசைக் கச்சேரியை ரசித்தபடி புஷ்ப பல்லக்கையும் பார்த்து ரசித்தனர். 

    நள்ளிரவு புஷ்ப பல்லக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து மண்டி வீதிக்கு வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. பின்னர் திருப்பதி தேவஸ்தானம், அண்ணாசாலை, வழியாக கோட்டை முன்பு நிலையை வந்தடைந்தன. 

    விடிய விடிய நடந்த இந்த புஷ்ப பல்லக்கை வழிநெடுக பக்தர்கள் கண் விழித்து காத்திருந்து ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர். சித்ரா பவுர்ணமி புஷ்பப் பல்லக்கையொட்டி ஏ.டி.எஸ்.பி சுந்தரமூர்த்தி தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×