என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவண்ணாமலை நகருக்குள் 15 முதல் 17-ந்தேதி வரை பஸ்கள் செல்ல அனுமதி இல்லை
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்குள் 15 முதல் 17-ந்தேதி வரை பஸ்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதையொட்டி சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வருகிற16-ஆம் தேதி அதிகாலை 2.32 25 மணிக்கு தொடங்கி 17-ஆம் தேதி அதிகாலை 1:17 மணிக்கு நிறைவடைகிறது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்-பட்டுள்ளது.
இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கூடுதல் கலெக்டர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஏ.எஸ்.பி.கிரண் ஸ்ருதி, டி.எஸ்.பி.குணசேகரன், கோவில் உதவி ஆணையர் ராஜேந்திரன், பொறியாளர் முனுசாமி, நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.பொதுக் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கவும், மினி லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். பொது சுகாதாரத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
மேலும் வடக்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களை தங்க வைக்க பள்ளிகள், கல்லூரிகளில் தேவையான வசதிகள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,806 சிறப்பு பஸ்கள், 6,086 முறையும், தனியார் பஸ்கள் 509 முறையும் இயக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
சென்னை வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 932 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் சிறப்பு பஸ்கள் அனைத்தும் வரும் 16-ஆம் தேதி அதிகாலை முதல் 17-ஆம் தேதி வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும்15-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை நகருக்குள் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
9 இடங்களில் அமையும் தற்காலிக பஸ் நிலையங்கள் வரை சிறப்பு பஸ்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்-பட்டது.மேலும் கார், வேன் நிறுத்துவதற்காக நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் 45 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
Next Story






