search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவ லிங்கத்தின் மீது இன்று காலை சூரிய ஒளி பட்ட காட்சி.
    X
    சிவ லிங்கத்தின் மீது இன்று காலை சூரிய ஒளி பட்ட காட்சி.

    திருவலம் அருகே சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் இன்று முதல் 9 நாட்கள் நடக்கிறது

    திருவலம் அருகே ஆண்டுதோறும் 9 நாட்கள் மட்டும் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் இன்று முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் திருவலம் அருகே சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது விண்ணம்பள்ளி கிராமம். 

    இந்த கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஈசானிய வாயில் படியை கொண்ட இந்த கோவிலில் அகத்திய முனிவர் வழிபட்டார் என தல புராணத்தில் கூறப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி உத்திரம் உத்திராயண காலத்தில் (பங்குனி 23-ந்தேதி முதல் சித்திரை 1-ந்தேதி வரை) 9 நாட்கள் காலை 6-15 மணி முதல் 6-45 மணி வரை இங்குள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பான தொரு அதிசய நிகழ்வாக நடைபெறுகிறது. இந்த கோவிலை தரிசனம் செய்தால் 7 பிறவிகளில் செய்த வினைகள் தீரும் என கூறப்படுகிறது.

    இதனால் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த சூரிய ஒளி விழும் நிகழ்ச்சியினை காண வருகை தருகின்றனர்.

    வான சாஸ்திரம் எவ்வித அறிவியல் தொழில் நுட்பங்களோ, நவீன உபகரணங்களோ இல்லாத அந்த காலங்களில் வான சாஸ்திரத்தை துல்லியமாக ஆராய்ந்து வருடத்தில் பங்குனி மாதம் 9 நாட்களில் மட்டும் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் வகையில் இந்த கோவிலை கட்டியிருப்பது தமிழர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ளது.

    இந்த கோவிலில் சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புறமுள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து. கோவிலில் உள்ள 3 பிரகாரங்களை கடந்து சிவலிங்கத்தின் மீது விழுகிறது. முதலில் சிவலிங்கத்தின் மேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக சிவலிங்கத்தின் மையப் பகுதியை அடைகிறது. 

    இதையடுத்து கீழே இறங்கி மறைந்து விடுகிறது.திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகள் அனைத்தும் 30 நிமிடங்களில் நடந்து முடிந்து விடுகிறது. இன்று காலை 6-20 மணிக்கு சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்தது. 

    6-45 மணிக்கு சூரிய ஒளி மறைந்து விட்டது.இந்த அரிய நிகழ்வை பார்த்து வழிபட்ட திரளான பக்தர்கள் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும்போது தீபாராதனை காட்டி நமச்சிவாய என்றும், தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றும் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

    வேலூரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலை விலும், காட்பாடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த கோவில் அமைந்துள்ளது.

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 4-45 மணிக்கு விண்ணம்பள்ளி செல்லும் அரசு பஸ்சில் சென்று விண்ணம்பள்ளியில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றால் கோவிலை அடையலாம். அல்லது சென்னை- சித்தூர் சாலையில் சேர்க்காடு கூட்ரோட்டில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம்.

    சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் வருகிற 14-ந்தேதி வரை நடைபெறும்.

    சூரிய ஒளி விழும் அதிசய கோவில் உள்ள இப்பகுதியை சுற்றுலாதலமாக்கி, போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்தினால் பக்தர்கள் எண்ணிக்கை பெருகும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
    Next Story
    ×