search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் வனத்துறை சார்பில் தயார் செய்யப்பட்டு வரும் விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள்.
    X
    திருவண்ணாமலையில் வனத்துறை சார்பில் தயார் செய்யப்பட்டு வரும் விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள்.

    திருவண்ணாமலை வனப்பகுதியில் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க நடவடிக்கை

    திருவண்ணாமலை வனப்பகுதியில் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகரப்பகுதியையொட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு மான்கள், மயில்கள், பாம்புகள், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகளை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தினமும் வனப்பகுதியில் ரோந்து சென்று வனவிலங்கு வேட்டை ஈடுபடுபவர்களை பிடித்து அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்து வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் மத்தியில் வனவிலங்குகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேலூர் வனப்பாதுகாவலர் சுஜாதா அறிவுரையின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்பேரில் வனத்துறை சார்பில் 50-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு 

    வருகிறது. அந்த விழிப்புணர்வு அறிவிப்பு பலகையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    காப்பு காட்டில் அத்துமீறி உள்ளே நுழைவது வன சட்டப்படி குற்றமாகும். காப்பு காட்டிற்குள் மது அருந்துதல், புகை பிடித்தல், மரங்களை வெட்டுதல், கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுதல், மணல் அள்ளுதல், நில ஆக்கிரமிப்பு, தீ வைத்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.  

    வனவிலங்குகளுக்கு தின்பண்டங்களை கொடுக்க கூடாது. வன விலங்குகளை வேட்டை யாடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை 40 கி.மீ.வேகத்திற்குள் இயக்கி செல்ல வேண்டும். அதிவேகத்தில் வாகனங்களை இயக்ககூடாது. 

    இந்த வன விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும் வன குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பற்றி பொதுமக்கள் 99653 07101, 88387 61144, 04175- 25 4018 ஆகிய தொலைபேசி எண்களில் புகார்களை தெரிவிக்கலாம்.  அதன்பேரில் வனத்துறை சார்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுபற்றி வனச்சரகர் சீனிவாசன் கூறும்போது, வன குற்றங்களைத் தடுக்கும் வகையில் கிரிவலப்பாதையில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட உள்ளது. 

    ஏற்கனவே இப்பணிகள் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் வனத்துறை விதிகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    Next Story
    ×