என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
    X
    தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    திருவண்ணாமலையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு

    திருவண்ணாமலையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை ஈசானிய மைதானம் பகுதியில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற தலைக்கவச விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி தொடக்கவிழா நேற்று காலை நடைபெற்றது.

    இதில் கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் பிரதாப், டாக்டர் கம்பன், ஏ.எஸ்.பி.கிரண் சுருதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த வாகன பேரணி அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதிகளை வலம் வந்து மீண்டும் ஈசனானிய மைதானத்தை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு பேசும்போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்வது அவசியம். 

    இதேபோல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும்.இதன்மூலம் விபத்து உயிரிழப்புகளை  தவிர்க்கலாம் என்றார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் பேசும்போது, தலைக்கவசம் அணிவதில் வாகன ஓட்டிகள் மெத்தனமாக இருக்க கூடாது. தலைக்கவசம் உயிர்க்கவசமாக உதவும். உங்களை நம்பியிருக்கும் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்க தலைக்கவசம் அணிவதை மறக்காமல் கடைபிடியுங்கள் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பும் சமூக ஆர்வலர்கள் 4 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. 

    மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கு ஸ்டேட் வங்கி சார்பில் இலவசமாக தலைக்கவசம் வழங்கப் பட்டது. 

    Next Story
    ×